காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால உறுப்பினரும், மூத்த தலைவருமான கமல் நாத் மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். எனினும், அவர் மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தொடர்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் `ஒரு நபர் - ஒரு பதவி’ கொள்கையைப் பின்பற்றி கமல் நாத் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை கமல் நாத்தின் ராஜினாமாவை ஏற்றுள்ளதோடு, முன்னாள் மாநில அமைச்சரும், ஏழு முறை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்தவருமான டாக்டர் கோவிந்த் சிங் காங்கிரஸ் கட்சியின் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக நியமித்து அறிவித்துள்ளது.
அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல் நாத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், `மத்தியப் பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து தாங்கள் விலகியதை காங்கிரஸ் தலைவர் ஏற்றுக் கொண்டார். மேலும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக டாக்டர் கோவிந்த் சிங் பொறுப்பேற்பதையும் காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் 2023ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கமல் நாத் மத்தியப் பிரதேசக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. கமல் நாத் ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். கடந்த 2018ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராகப் பதவியேற்றார் கமல் நாத். எனினும், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் 22 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்ததால் அவரது பதவி பறிபோனது. அதன்பிறகு, தனக்கு ஆதரவு அளித்த 91 எம்.எல்.ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பெற்றார் கமல் நாத்.
மத்தியப் பிரதேசத்தின் லஹர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ டாக்டர் கோவிந்த் சிங் நீண்ட காலமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக காத்துக் கொண்டிருந்தவர் எனக் கூறப்படுகிறது.