நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்களை காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைமை நிகழ்த்தி வருகிறது. அடுத்தாண்டு உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலும் அதற்கடுத்த ஓராண்டுக்குள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேசிய அளவில் கட்சியை தயார்படுத்தும் விதமாகவும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.


தென்னிந்தியாவில் காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம் 


வடமாநிலங்களில் உள்ள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைமைகளில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் பார்வை தென்மாநிலங்களை நோக்கி திரும்பி உள்ளது. கடந்த ஜூன் முதல் வாரத்தில் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.சுதாகரனையும் கடந்த வாரத்தில் தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக ரிவந்த் ரெட்டியையும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரியும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


5 ஆண்டுகளுக்குள் 3 தலைவர்கள் மாற்றம்


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் மூன்று தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. இந்த தோல்வியின் எதிரொலியாக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதவி விலகினார். சிலகாலம் காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவரே இல்லாமல் இருந்த நிலையில் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்தது. மூன்றாண்டுகாலம் காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் இருந்த நிலையில் கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்தது. 2019ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலையும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும் கே.எஸ்.அழகிரியின் தலைமையில்தான் காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டது. 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு 9 மக்களவை தொகுதிகளிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 25 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 18 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.


தலைவருக்கான பட்டியலில் ஆறு பேர்



காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஏற்கெனவே இருந்த தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட யாருக்கும் மீண்டும் தலைவராக வாய்ப்பில்லை எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் பொறுப்புக்கு கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், ஜோதிமணி கே.ஆர்.ராமசாமி, பீட்டர் அல்போன்ஸ் அகியோர் பெயரை கட்சி மேலிடத் தலைமை பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



இந்த பட்டியலில் மாணிக்கம் தாகூர் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும், தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளராகவும் உள்ளார். டாக்டர் செல்லக்குமார், கிருஷ்ணகிரி தொகுதியின் எம்.பி.,யாகவும் ஒடிசா மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளராகவும் உள்ளார்.


இறுதிப்பட்டியலில் இருவர்


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை இளைஞர்களை ஈர்க்கும்விதமாக நடவடிக்கைகளை / பிரச்சாரத்தை மேற்கொள்ளும் ஒருவரை புதிய தலைவராக நியமிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. மூத்த தலைவர்களையெல்லாம் ஓரம்கட்டி பாஜக தமிழக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டதுபோலவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும் இளம் தலைவரை நியமிக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தற்போது கரூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ராகுல்காந்தியின் குட் புக்கிலும் இடம்பெற்றுள்ள ஜோதிமணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.


 



ஜோதிமணி


 


அதேபோல், கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருக்கும் டாக்டர் செல்லகுமாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜோதிமணி, செல்லகுமார் இந்த இருவரில் ஒருவர் விரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவர் பொறுப்பை ஏற்பார்கள் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



செல்லக்குமார்


 


கே.எஸ்.அழகிரி மீதான தலைமையின் நம்பிக்கை


காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாட்டை பொறுத்து மாநிலத்தலைவர் நியமனங்களை காங்கிரஸ் கட்சி மேலிடம் நிகழ்த்தி வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று 2.5 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால் இந்த மாற்றம் தற்போது நிகழாது என்றும், இந்திய அளவில் தமிழகத்தில்தான் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிடத்தகுந்த எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் இருக்கும் நிலையில் கே.எஸ்.அழகிரி தலைமையை கட்சி மேலிடம் இன்னும் விரும்புவதாகவும் சில நிர்வாகிகள் தெரிவித்தாலும், கட்சியை தமிழ்நாட்டில் இன்னும் வலுவாக வளர்க்கவும், இளைஞர்களை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவரவும் தலைமை மாற்றம் என்பது அவசியம் என்பதால் புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது.