மதுரையை சேர்ந்த தி.மு.க நிர்வாகி ஒச்சு பாலு என்பவர் மீது தொடர்ந்து, பலரும் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தனர். நில அபகரிப்பு, வீடுகட்ட இடையூறு என தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் 80 வயது மூதாட்டியை வீடு மராமத்து பார்க்கவிடாமல் அதிகாரிகள் மூலம் மிரட்டுவதாக புகார் எழுந்தது. ஒச்சு பாலு குறித்து அந்த மூதாட்டி, நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் புகார் ஒன்றை அளித்தார். மேலும் காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆரப்பாளையம் 12 வது தெருவில் உள்ள படிப்பகம் ஒன்றை ஒச்சு பாலு இடித்து தள்ளியதாக முதலமைச்சருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 



 

இது குறித்து ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த சி.பி.எம் செயலாளர் ஸ்டாலின் நம்மிடம் தெரிவிக்கையில்....," தூக்கு மேடையில், தூக்கு கயிறுக்கு அஞ்சாமல் பொதுமக்களின் நலன் கருதி உயிர்த்தியாகம் செய்தவர்  பாலு. அதனால் உயிரை துச்சமாக நினைத்த தோழர் பாலு, தூக்குமேடை பாலு என்று கம்பீரமாக அழைக்கப்படுகிறார். இந்நிலையில் அவரது நினைவாக கரிமேடு 13 வது வார்டில் படிப்பகம் உருவாக்கப்பட்டது. அறிவை மேம்படுத்தும் வகையில் இந்த படிப்பகம் செயல்பட்டு வருகிறது. கிட்டதட்ட 70 ஆண்டுகள் பயன்பட்டு வருகிறது. இந்த படிப்பகம் மூலம் அறிவின் ஒளியை நோக்கி கொண்டு செலுத்தப்பட்டுள்ளனர். இந்த செயல் இப்பகுதியில் உள்ள சமூக விரோதிகளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை.  தி.மு.க பகுதி செயலாளர் ஒச்சு பாலு என்பவர் கூட்டுறவு சொசைட்டி தலைவராக ஆகவேண்டும் என கனவில் சுற்றிவருகிறார். இவருக்கு தூக்கு மேடை பாலு படிப்பகத்தின் மீது சிறிதும் விருப்பமில்லை. அந்த இடத்தை அடைந்து கார் ஸ்டாண்டு ஆக்க வேண்டும் என நீண்ட நாள் திட்டம் போட்டார். நேற்று படிப்பகத்தை நீங்கள் இடிக்கவில்லை என்றால் நாங்கள் இடித்துவிடுவோம் என எச்சரித்தார்.

 



 

இந்நிலையில் இன்று தோழர் பாலு படிப்பகத்தை இடித்து தள்ளிவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் படிப்பகம் செயல்படவும் நடவடிக்கை வேண்டுமென்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் புகார் கொடுத்துள்ளோம். அதே போல் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளோம்." என்றார். 

 

ஒச்சு பாலு மீது பல்வேறு நில ஆக்கிரமிப்பு புகார் உள்ள நிலையில் தூக்கு மேடை பாலு படிப்பகத்தை இடித்தது, கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.