புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேசிய ஜனநாயக சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்றார். குறிப்பாக முதல்வர் பதவியேற்று 45 நாட்கள் மேலாகியும் அமைச்சரவையை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தது. குறிப்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அமைச்சர் பதவி யாருக்கு ஒதுக்குவது என்ற குழப்பம் நிலவியது.


Delta Plus | டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கு மதுரையில் முதல் உயிரிழப்பு


இதற்கு காரணம் கூட்டணி கட்சிக்குள் இருந்த குழப்பம் எனச் சொல்லப்பட்டது. பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து புதிய அமைச்சரவை பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கடந்த 23ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இதில் 5 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியலில், பாஜகவிற்கு 2 அமைச்சர்களும் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 3 அமைச்சர்களும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் ரங்கசாமி வழங்கிய அமைச்சரவை பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தார். இந்த நிலையில் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டபுதிய அமைச்சரவை பட்டியலுக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து புதிதாக நியமிக்கவுள்ள 5 அமைச்சர்கள் யார் என்று புதுச்சேரி மாநில அரசிதழில் அதிகாரபூர்வமாக அரசு அறிவித்தது. 5 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திர பிரியங்கா, லட்சுமி நாராயணன் மற்றும் தேனி ஜெயக்குமார் உள்ளிட்ட மூவர் இடம் பெற்றிருந்தனர். இவர்களை அடுத்து பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணக்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.




நமச்சிவாயம்


இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. என் ஆர் காங்கிரஸின் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன் சந்திரா ப்ரியங்கா, பாஜக சார்பில் நமச்சிவாயம், சாய் சரவணன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


 






40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் உறுப்பினர் இடம்பெற்றுள்ளார். காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்ஆர் காங்கிரஸ் பெண் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து எம்எல்ஏவான ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. 


இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு எனக்கூறி ஆளுநர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு என்பது விவாதப்பொருளாகிய நிலையில் இந்திய ஒன்றியம் எனக்கூறி பதவியேற்பு விழா நடைபெற்றது.


40 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் பெண் அமைச்சர்!