தமிழ் புத்தாண்டு தை முதல் நாளா அல்லது சித்திரை முதல் தேதியா என்ற குழப்பம் இன்னும் தீராத நிலையில், அதிமுக ஆட்சியில் இருக்கும்போது சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என்று சொல்லி அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடுவதும், திமுகவை பொறுத்தவரை தை முதல் நாளான பொங்கல் விழா தினமே தமிழ் புத்தாண்டு நாள் என அறிவித்து கொண்டாடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.


இந்நிலையில், தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைத்துள்ள திமுக, பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு நாள் நவம்பர் 1க்கு பதிலாக ஜூலை 18ஆம் தேதி இனி கொண்டாடப்படும் என அறிவித்தது வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது விடுமுறை நாட்களை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.



2022ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்


அதில், சித்திரை 1ஆம் தேதியான ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என குறிப்பிட்டு அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவை பொறுத்தவரை தை முதல் நாளையே தமிழ் புத்தாண்டு என கொண்டாடி வரும் நிலையில், திமுக அரசு ஏன் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதோடு, சித்திரை 1தான் தமிழ் புத்தாண்டு என்பதை திமுக அரசு ஏற்றுக்கொண்டுவிட்டதா என கேட்டு பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.


இது குறித்து தலைமைச் செயலக அதிகாரிகளிடம் கேட்டபோது, தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை, 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு முதல்வராக இருந்த ஜெயலலிதா புதிதாக ஒரு சட்டம் கொண்டு வந்து ரத்து செய்தார்.  அதன்படி, சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என அவர் அறிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்த நிலையில், இந்த சட்டமே அமலில் இருந்து வருகிறது. அதனால், அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டத்தின்படி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு நாளாக அறிவித்து அன்று விடுமுறையை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார் என விளக்கம் அளித்துள்ளனர்.


வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடைமுறையில் உள்ள சட்டத்தை ரத்து செய்யும் விதமாக புதிய சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து, மீண்டும் தை முதல் நாளையே தமிழ் புத்தாண்டு என அறிவிக்க அவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எனவே, திமுகவின் கொள்கைபடி தை முதல்நாளான பொங்கல் திருநாளையே தமிழ் புத்தாண்டு / வருட பிறப்பாக மீண்டும் அறிவிக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.