காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன் பேட்டியளித்த பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் தற்போது தனது புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். `பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கட்சி இன்னும் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு ஒப்புதல் பெறவில்லை. 


கடந்த நவம்பர் 2 அன்று, சண்டிகரில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்த கேப்டன் அம்ரிந்தர் சிங், `நமக்கான கட்சியை நாமே தொடங்குவோம் என்று நாம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நமது வழக்கறிஞர் குழு இதுதொடர்பாக பணியாற்றி வருகிறார்கள்; கட்சியைப் பதிவு செய்வதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெறவுள்ளோம். புதிய கட்சிக்குத் தற்போது சூட்டப்பட்டுள்ள பெயரில் எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது’ எனத் தெரிவித்தார். 



கேப்டன் அம்ரிந்தர் சிங்


 


புதிய கட்சியின் சின்னம் குறித்து பேசிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங், தேர்தல் ஆணையம் தங்களுக்கு மூன்று சின்னங்கள் வழங்கி அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளித்ததாகக் கூறியுள்ளார். மேலும் அவர், தனது புதிய கட்சியின் சார்பில் மூன்று வெவ்வேறு சின்னங்களைச் சமர்பித்ததாகவும், மொத்தமாக 6 சின்னங்களுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


புதிய கட்சியின் பெயர் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரப்பூர்வமாக கட்சி பின்னர் தொடங்கப்படும் எனவும் கேப்டன் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். புதிய கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள், எதிர்கால நோக்கம் முதலானவை புதிய கட்சி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் போது வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 


பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் கடந்த ஒரு ஆண்டாக கேப்டன் அம்ரிந்தர் சிங்கிற்கும், நவஜோத் சிங் சித்துவிற்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கின. அதன் விளைவாக, தன்னை கட்சித் தலைமை அவமானப்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங். 



கேப்டன் அம்ரிந்தர் சிங்


 


காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு 7 பக்கங்களில் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிய கேப்டன் அம்ரிந்தர் சிங், அதில், `நீங்களும், உங்கள் குழந்தைகளும் நடந்துகொண்ட விதம் என்னை ஆழமாக பாதித்துள்ளனர். உங்கள் குழந்தைகளை என் குழந்தைகளைப் போல நேசித்தேன். ஏனெனில் எனக்கு அவர்கள் இருவரின் அப்பாவை நன்றாகத் தெரியும். நாங்கள் இருவரும் சுமார் 67 ஆண்டுகளுக்கு முன், 1954ஆம் ஆண்டு முதல் ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள்’ என்று ராஜீவ் காந்தியுடனான தனது பழக்கம் குறித்தும் குறிப்பிட்டிருந்தார். 


வரும் 2022ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன.