மக்களவை பிரதிநிதியாக நடிகை கங்கனா ரனாவத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த மனுவுக்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ரணாவத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், எதற்காக கங்கனாவின் வெற்றிக்கு எதிராக எதற்காக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து காண்போம்.


ஹிமாச்சல் பிரதேச மக்களவைத் தேர்தல்: 


ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மக்களவை தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து முன்னாள் வனத்துறை ஊழியர் லயக் ராம் நேகி ஹிமாச்சல் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, கங்கனாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


எதற்காக கங்கனாவுக்கு எதிராக நோட்டீஸ்:


நேகி, மண்டி மக்களவைத் தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளராக நேகி வேட்புமனு தாக்கல் செய்தார், ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தனது மனுவில், தனது வேட்பு மனுக்கள் தவறாக நிராகரிக்கப்பட்டதாகவும், மண்டி தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை ரத்து செய்யுமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.


இதுகுறித்து நேகி தெரிவித்ததாவது, மண்டி மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை மே 14, 2024 அன்று தாக்கல் செய்தேன். தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்க மறுநாள் வரை அவகாசம் வழங்கப்பட்டது, மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து தொலைபேசி, தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கான நிலுவைத் தொகை இல்லா சான்றிதழ்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


மே 15 அன்று RO அதிகாரியிடம் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். ஆனாலும் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


”தேர்தல் முடிவு மாறியிருக்கும்”


வேட்புமனுவில் சில பிழைகள் இருந்ததால், சரி செய்ய முடியாத காரணத்தால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று RO தன்னிடம் கூறியதாக நேகி கூறினார். அவரது ஆவணங்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்து, தேர்தலில் பங்கேற்றிருந்தால் தேர்தல் முடிவு வேறுபட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..




மண்டி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்ய சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் பாஜக வேட்பாளரான கங்கனா ரனாவத். சிங் 4,62,267 வாக்குகளும், 5,37,002 வாக்குகளும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், கங்கனா ரனாவத்தின் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு, எதன் போக்கில் செல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.