சென்னை, கோயம்பேட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் இன்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த தினகரன் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமைக்கவும், தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் ஆட்சி அமைக்கவுமே அ.ம.மு.க., தே.மு.தி.க. கூட்டணி அமைத்துள்ளது. தீய சக்தியான தி.மு.க.வும், துரோக கட்சியான அ.தி.மு.க.வும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காகவே கூட்டணி அமைத்துள்ளோம். 





கூட்டணிக்காக தே.மு.தி.க.விற்கு அ.ம.மு.க.வே அழைப்பு விடுத்தது. சட்டசபை தேர்தலில் சசிகலாவின் முழு ஆதரவும் அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணிக்கே உள்ளது. வெற்றிநடைபோடும் தமிழகம் என்பது மக்களின் காதில் பூ சுற்றும் வேலை. அ.தி.மு.க. சாத்தியமற்ற வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.  இந்த சந்திப்பின்போது எல்.கே.சுதீஷ் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.