BJP TN Next Leader; பாஜக தமிழ்நாடு அடுத்த தலைவர் யார்.? சூடுபிடிக்கும் ரேஸில் குதித்த சீனியர்கள்...

பாஜக தமிழ்நாடு மாநில அடுத்த தலைவராக அண்ணாமலையே அறிவிக்கப்படுவார் என்ற பேச்சு உள்ள நிலையில், சில சீனியர்கள் தலைவருக்கான போட்டியில் குதித்திருப்பதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

பாஜக தமிழ்நாடு தலைவர் குறித்து ஜன.21-ல் அறிவிப்பு.?

பாஜகவில், ஒரு மாநில தலைவராக இருப்பவருக்கான பதவிக் காலம் 3 ஆண்டுகள் மட்டுமே. அதேபோல், ஒருவர் இரண்டு முறை மட்டுமே தலைவராக நியமிக்கப்படுவார். இந்த பாஜக விதிகளின்படி, கடந்த 2021-ம் ஆண்டு தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலையின் பதவிக் காலம் நிறைவடைந்தது. அதனால், அடுத்த தலைவரை நியமிப்பது குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ளன. அதன்படி, வரும் 21-ம் தேதி, பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Continues below advertisement


தலைவர் ரேஸில் குதித்த சீனியர்கள்

பாஜக தமிழ்நாடு மாநில தலைவருக்கான பேச்சுவாத்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், அந்த போட்டியில் சில சீனியர் தலைவர்கள் குதித்துள்ளதாக தெரிகிறது. போட்டியில் ஏற்கனவே அண்ணாமலையின் பெயரும் உள்ள நிலையில், பாஜக எம்எல்ஏ-க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோரும் போட்டியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, அண்ணாமலை மீது அதிருப்தியில் உள்ள சில சீனியர்கள், இவர்களில் யாராவது ஒருவருக்கே ஆதரவளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தலைவரை தேர்ந்தெடுக்க ஆலோசனை கூட்டம்

பாஜக தமிழ்நாட்டின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கலந்துகொண்டு, அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தவிருக்கிறாராம். அதன்பிறகு, தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பான பரிந்துரைகளை கட்சித் தலைமையிடம் அளிப்பார் என தெரிகிறது. அதன் அடிப்படையில், பாஜக தேசிய தலைமை, பாஜக தமிழ்நாட்டிற்கான புதிய தலைவரை தேர்ந்தெடுத்து, வரும் 21ம் தேதி அறிவிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.


அண்ணாமலைக்கே மீண்டும் வாய்ப்பு.?

இது ஒருபுறமிருக்க, அண்ணாமலையை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே பாஜக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலை தலைவரான பிறகே, தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதால், அதனை மனதில் வைத்து, அண்ணாமலைக்கே மீண்டும் வாய்ப்பளிக்க தேசிய தலைமை விரும்புவதாக சொல்கின்றனர்.

அப்படி, அண்ணாமலைக்கு மீண்டும் பதவி வழங்கப்படும் பட்சத்தில், கட்சிக்குள் சலசலப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக, அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது. ஏற்கனவே, அண்ணாமலை ஆதரவாளர்களின் நடவடிக்கைகளால் தமிழ்நாடு பாஜக சீனியர்கள் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், இப்பிரச்னை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூகமான முறையில் மாநிலத் தலைவரை நியமிக்க வேண்டும் என டெல்லி தலைமை உத்தரவு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola