நாட்டின் முக்கிய மாநிலங்களில் ஒன்றாக இருப்பது மகாராஷ்டிரா. வரலாற்று ரீதியாக எவ்வளவு முக்கியமோ அதேபோல அரசியல் ரீதியாகவும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. நாடாளுமன்ற மக்களவைக்கு உத்தர பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக அதிக எம்பிக்களை (48) அனுப்புகிறது.
இதன் காரணமாகவே, அங்கு நடக்கும் அரசியல் மாற்றங்கள் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போது, நடந்திருக்கும் மாற்றமும் அப்படிதான். அங்கு ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.
இரண்டாக உடையும் தேசியவாத காங்கிரஸ்:
இந்த சூழலில், தேசியவாத காங்கிரஸ், இரண்டாக உடைக்கப்பட்டு தற்போது ஆளும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. இதற்கு காரணமாக இருப்பவர் அஜித் பவார். தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன். தேசிய அளவில் சரத் பவார் அதிகாரம் படைத்த தலைவராக இருந்தாலும், மாநில அளவில் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராக இருப்பவர்.
மகாராஷ்டிரா முதலமைச்சராக வர வேண்டும் என கனவு கண்டாலும், துணை முதலமைச்சர் பதவியே இவருக்கு மிஞ்சுவது வாடிக்கையாகிவிட்டது. இதுவரை, 4 முறை துணை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். தற்போது, ஐந்தாவது முறையாக அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவர், கட்சியில் பிளவை ஏற்படுத்துவது இது முதல்முறை அல்ல. மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு, சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த பிறகு, பாஜகவுடன் அமைத்தார். அந்த சமயத்தில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆளுங்கட்சியாக இருந்த பாஜக உள்ளிட்ட எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவானது.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அஜித் பவார், கட்சி தலைமைக்கு எதிராக, தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் சென்று பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 5 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது.
எதிர்க்கட்சி கூட்டணிக்கு மீண்டும் கல்தா:
தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்த நிலையில், சிவசேனா - காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மகாவிகாஸ் எனும் கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி ஆட்சி அமைத்தபோது மீண்டும் தேசியவாத காங்கிரசில் இணைந்தார் அஜித் பவார். அந்த கூட்டணியிலும் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மகா விகாஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பிரிந்து சென்று பாஜக உடன் கூட்டணி அமைத்தார். மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து அவர் முதலமைச்சர் ஆன நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் நடந்தன. தனது மகள் சுப்ரியா சூலேவுக்கும் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேலுக்கும் செயல் தலைவர் பதவி வழங்கினார் சரத் பவார். தனக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்படும் என அஜித் பவார் எதிர்பார்த்திருந்த நிலையில், அவருக்கு எந்த விதமான கட்சி பதவியும் வழங்கப்படவில்லை. இதனால், அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், அஜித் பவார் மீண்டும் தனது ஆதரவு எம். எல்.ஏக்களுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அஜித் பவார் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.