அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் ஒழியப் போவது எப்போது? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டன அறிக்கை விடுத்துள்ளார். அதில், நெஞ்சைப் பிளக்கும் செய்தி! மனிதநேயம் மரணித்த மகா கொடுஞ்செயல்! மனிதகுலமே - எந்நாட்டவராயினும் தலைகுனிய வேண்டிய மகாமகா கோரத்தின் தாண்டவம்!
மனிதகுலத்தின் மனச்சாட்சிக்கு சவால் விடும் செயல்
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் எழில் வாய்ந்த உவால்டே நகரில் உள்ள ரோப் என்கிற ஆரம்பப் பள்ளியில் படித்துவந்த இளம் மொட்டுகளை - 19 மாணவச் செல்வங்கள், இரண்டு ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 21 பேர் - அப்பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் மரணமடைந்துள்ள அசாதாரண அதிர்ச்சித் தகவல் - மனிதகுலத்தின் மனச்சாட்சிக்கு சவால் விடும் செயல் அல்லவா!
அமெரிக்கா வளர்ந்த நாடு என்று பெருமையை - தொழில்நுட்ப விஞ்ஞானத் துறையில் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இரண்டு முக்கிய பிரச்சினைகள் அங்குண்டு. நாகரிகக் காட்டுமிராண்டிகளும் வாழும் நாடாக - மனித கிறுக்குத்தனத்தின் கோணல் புத்தியிலிருக்கும் மனிதர்களில் சிலர் மாறாத்தன்மையுடன் இப்படி நடந்துகொள்வது அப்பாவி மக்களின் - அதுவும் கல்வி கற்க வந்த இளந்தளிர்களை இப்படி துடிதுடிக்கச் சுட்டுக் கொல்வதற்கு வேறு என்ன பெயர் சொல்ல முடியும்? ‘காட்டுமிராண்டிப் பருவம்' என்பதிலிருந்து அந்நாடு இப்படிப்பட்ட மனிதக் கிறுக்கர்களுக்கு எப்போது முடிவு கட்டப் போகிறது?
பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க, அதனை ஒடுக்க முன்னுரிமை என்று முழங்கும் நாட்டில் - உள்நாட்டில் - இப்படி திடீர் திடீரென அங்காடிகளில் திடீர் துப்பாக்கிச் சூடு, வழிபாட்டு நிலையங்களில், கல்வி நிலையங்களின் உள்ளே புகுந்து திடீர் துப்பாக்கிச் சூடு என்பதற்கு எப்போது, எப்படி முற்றுப்புள்ளி வைக்கப் போகிறீர்கள்? உலகம் அந்நாட்டைப் பார்த்துக் கேட்கும் அறிவார்ந்த கேள்வி! இதைத் தடுக்கவேண்டிய அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்களே, இந்தத் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எப்போது முற்றுப்புள்ளி என்று கேள்வி கேட்டிருப்பது - அனுதாபம் - கண்டனம் இவற்றையெல்லாம் தாண்டி - இவ்வாறு கேட்டிருப்பது நமக்குப் புரியாத புதிராக உள்ளது!
அவர்தான் ஆளுகிறார்; அதற்குத் தடுப்பு முறைச் சட்ட திட்டங்களை உருவாக்கி, அம்மக்களின் - இளந்தளிர்களின் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்புத் தேடித்தர வேண்டாமா? ஒவ்வொரு முறை துப்பாக்கிச் சூடு - ஒவ்வொரு முறை வெள்ளை -கருப்பின மோதல், காவல் துறை அதிகாரிகள் சிலரின் சட்ட மீறல் (இனவெறி உள் நீரோட்டம் காரணமாக) அப்பாவி கருப்பின மக்களின் உயிரைப் பறித்தல் போன்ற கொடுமைகள் ஒழிக்கப்பட்டால்தானே உலகத்தாரால் அந்நாடு ‘வளர்ந்த நாடு’ என்று ஒப்புக்கொள்ள முடியும்?
கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத அரசின் நிலைப்பாடு
துப்பாக்கிகளை - சதா நுகர்பொருள்கள் வாங்குவதுபோல தங்கு தடையற்று வாங்குவது, கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத அரசின் நிலைப்பாடு - எங்கெங்கு குறைபாடுகள் - சட்ட நிரப்புதல்கள் தேவையோ அதனைச் செய்யாமல் வெறும் ஓலமிடுவது - எப்படி இனி வருமுன்னர் காக்க உதவும்? துப்பாக்கி உற்பத்தித் தொழில் அங்கே மிகவும் செல்வாக்குப் படைத்த தொழில். அதில் கைவைத்து கட்டுப்பாடுகளைப் புகுத்த அங்குள்ள பிரபல இரண்டு கட்சிகளுக்கும் தயக்கம் என்ற கருத்து, வெளி உலகில் பரவலாகப் பரவியுள்ள கருத்து. இதனைப் பொய்யாக்கிக் காட்டி, போதிய கட்டுப்பாடுகளை விதித்து, வெளியே செல்பவர்களுக்கு, பள்ளிக்குச் செல்பவர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை என்ற கொடுமைக்கு முழு முற்றுப்புள்ளி வைக்க இந்த கொடுஞ்செயலுக்குப் பணியாது அந்நாட்டு நிர்வாகம் - ஆளுமை ஏற்பாடுகளைச் செய்து, மனித குலத்தின் இந்த கோணல் புத்தியை நிமிர்த்த தக்க வழிகாண வேண்டியது மிகவும் அவசியம்! அவசரம்!!
மனித நேயம் அல்லவா வளரவேண்டும்? வெறியினால் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பூந்தளிர்களுக்கு இதயக் கண்ணீர் ‘காணிக்கை’ - அவர்களைத் தாலாட்டி கல்வியை ஊட்டி, இன்று தியாக தீபங்களாகிவிட்ட இரண்டு ஆசிரியை சகோதரிகளுக்கு நமது வீர வணக்கம்! இந்த அமெரிக்க நிகழ்வு காரணமான உலகத்தின் கண்ணீர் அதன் வரலாற்றுப் பக்கங்களில் இருந்து இதுபோன்ற கொடூரக் கொடுமைகள் நிகழாவண்ணம் அழித்தொழிக்குமாக!
நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!
நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் அந்தக் குழந்தைகளை இழந்த குடும்பத்து உறுப்பினர்களுக்கு!