சேலம் மாநகராட்சியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 200 பேட்டரி வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் தற்போது மண்ணோடு மண்ணாகி வருகிறது. இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியும் சேர்க்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மாதிரி சாலைகள், திருமணிமுத்தாறு புனரமைப்பு, நவீன பேருந்து நிலையங்கள், நவீன சாலைகள், ஏரிகள், நீர் நிலைகள் போன்ற உள்கட்டமைப்புகளுக்காக சேலம் மாநகராட்சிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது.


இந்த மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து சேகரிப்பதற்காக பேட்டரியால் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. கடந்த 8.9.2018 ஆம் தேதி அன்று, இந்த வாகனங்களை இயக்கி பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தினார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த பேட்டரி வாகனங்கள் அனைத்தும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.



சேலத்தைச் சேர்ந்த அருண் இந்தியன் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 179 வாகனங்களை கொள்முதல் செய்திருக்கிறது சேலம் மாநகராட்சி. ஒரு வாகனத்தின் விலை 1.80 லட்சம் ரூபாய் என்ற அளவில் மொத்தம் 3.22 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் மாநகராட்சி பகுதியில் உள்ள வீதிகள் தோறும் சென்று வீடுகளில் இருக்கக் கூடிய மக்கும் மற்றும் மக்காத குப்பை பெற்று அதனை தரம்பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது அந்த வாகனங்கள் அனைத்தும் செயல்படாமல் சிதிலமடைந்து கிடக்கிறது. இந்த வாகனங்கள் உடைந்தும், பேட்டரிகள் செயலிழந்து, சேலம் மாநகராட்சியின் கீழ்த்தளத்தில் அலுவலக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 60 க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சேலம் மாநகர் பல்வேறு பகுதிகளில் இந்த வாகனங்கள் சாலையோரத்தில் குப்பை மேடுகளிலும் கிடப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே மாநகராட்சி முழுவதும் குப்பைகள் தேங்கி வருகிறது. 



ஏற்கனவே இதைப் பற்றிய செய்தி தொகுப்பு ஏபிபி நாடு செய்தி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இதுகுறித்து இன்று மாமன்றம் இயல்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது அஸ்தம்பட்டி மண்டலத் தலைவர் உமாராணி பேசுகையில், கடந்த ஆட்சி காலத்தில் வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்களில் பல்வேறு முறைகேடு மற்றும் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதனால் தற்போது 125 பேட்டரி வாகனங்கள் பழுதடைந்துள்ளது, இதன் காரணமாக மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அல்ல படாமல் தேங்கி நிற்கிறது என்று கூறினார். இதற்கு பதிலளித்துப் பேசிய மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி, அதிமுக ஆட்சிக்காலத்தில் சேலம் மாநகராட்சிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தியுள்ளார். மாநகராட்சிக்கு வாங்கப்பட்டுள்ள பேட்டரி வாகனங்கள் ஆயுட் காலம் முடிவடைந்ததால் மட்டுமே வாகனங்கள் ஓடவில்லை, இதற்காக அதிமுக ஆட்சியை குறை கூறுவது எந்தவித நியாயமும் இல்லை என்று கூறினார். அதன்பின் மாமன்ற கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.