“நாம் எல்லோரும் அண்ணா வழியில் வந்தவர்கள். ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதுபோல்தான் கவர்னர் பதவியும். இருப்பினும் தி.மு.க., வரம்பு மீறி தவறான ஆட்சி செய்யும் போது மூக்கணாங்கயிறு போல கவர்னர் இருப்பது தேவை தான் என தோன்றுகிறது” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டத்தில் நடந்த திருமணம் உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் முன் கூட்டியே தொடங்கிவிட்டோம். மழை காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து விட்டோம். மழையால் பணிகளை முடிக்கவில்லை என முதல்வர், அமைச்சர் ஆகியோர் கூறியிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு கண்முன்னே குழி தோண்டி வைக்கப்பட்டுள்ளது. 80, 85 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என பர்சன்டேஜ் கணக்கு சொல்வது என்பது தான் ஞாபகம் இருக்கிறதே தவிர, பொய் சொல்லாமல் உண்மையை மக்களிடம் சொல்லி இருக்கலாம்.

அனைத்து ஆட்சியிலும் நிறைய செய்கிறார்கள், செய்யாமலும் விட்டு விட்டு விடுகிறார்கள். மக்களுக்கு தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் பட்டிதொட்டி முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றாதீர்கள்.
 
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை தன்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது தவறு இல்லை. இதில் தி.மு.க., அரசியல் செய்தால், மக்கள் சும்மா விடமாட்டார்கள். ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கையை வெளியிட்டு தி.மு.க., எப்படி அசிங்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். 99 சதவீத அரசியல் நோக்கர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் திருமாவளவன் இருப்பதால், தி.மு.க., போலவை பேசி வருகிறார். மதவாதத்துக்கு எதிராக பேசுவதை திருமாவளவன் உள்ளிட்ட தி.மு.க., கூட்டணியினர் நிறுத்தி விட்டு, மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். இல்லையொன்றால் 2024ல் இதற்கான பலனை அனுபவிப்பார்கள்.

நாம் எல்லோரும் அண்ணா வழியில் வந்தவர்கள் என்பதால், ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதுபோல்தான் கவர்னர் பதவியும். இருப்பினும், தி.மு.க., வரம்பு மீறி தவறான ஆட்சி செய்யும் போது, மூக்கணாங்கயிறு போல கவர்னர் இருப்பது தேவை தான் என தோன்றுகிறது. கவர்னர் பேசுவதை பெரிதுப்படுத்த தேவையில்லை. அவர் ஒரு அதிகாரி தான்.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உடனடியாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை என பழிப்போடாமல். தமிழக அரசு இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.  ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஆட்சியில் இருக்கும் போது இருவரும் அதிகாரத்துடன் செயல்படுகின்றனர்.

தி.மு.க.வை வீழ்த்த கூட்டணியால் தான் முடியும். எனவே ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி வைக்க வேண்டும். அந்தக் கூட்டணிக்கு அமமுக நேசம் கரம் நீட்ட தயார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.