மக்கள் நீதி மய்யத்திலிருந்து அதன் துணைத் தலைவர் மகேந்திரன் விலகியிருக்கிறார். அவர் விலகவில்லை என்றால், நீக்கப்பட்டிருப்பார் என்கிறது மநீம தலைமை. கட்சியின் முக்கிய நபராக, கமலின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த மகேந்திரன், திடீரென மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் விலக காரணம் என்ன? தான் கொண்டாடிய மகேந்திரனை திடீரென துரோகி என கமல் விமர்சிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? மகேந்திரனுடன் மேலும் சில நிர்வாகிகள் ராஜினாமா செய்யும் அளவிற்கு வலியுறுத்தியது யார்? அத்தனை கேள்விகளுக்கும் விடை தேடி நேரடியாக களமிறங்கியது ABP நாடு.




தேர்தல் முடிவு வந்து முழுதாய் ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் ஒரு கட்சிக்குள் இத்தனை மோதல் எப்படி எழுந்தது. முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசத் துவங்கினோம். ‛இது தேர்தல் முடிஞ்சு துவங்கிய பிரச்னை இல்லை சார்… தேர்தல் நடக்கும் போதே தொடங்கின பிரச்னை,’ என நல்ல லீடு கொடுத்தார் அந்த நிர்வாகி. ஆர்வமாய் அவரிடம் பேசினோம்.


‛கோவை தெற்கு தொகுதியை தேர்வு செய்ய காரணமானது மகேந்திரன் தான். கடந்த முறை மநீம அங்கு பெற்ற ஓட்டுகள் தான், அதற்கு காரணம். மநீம-வை விட, கமலை விட மகேந்திரன் அந்த தொகுதிக்கு பரிட்சயம் ஆகியிருந்தார். அதற்கு காரணம் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மநீம வேட்பாளரா அவர் போட்டியிட்டு 1 லட்சத்து 45 ஆயிரத்து 104 ஓட்டுகள் வாங்கி  மூன்றாவது இடத்தை பிடிச்சாரு. அது தான் அங்கே கமல் போட்டியிட காரணமானது. ஆரம்பம் மாதிரி முடிவு எப்போதும் இருக்கிறது இல்ல. அங்கே தலைவர் கமல் மட்டும் ஓடிட்டு இருந்தாரு… யாருமே அவர் கூட ஓடலே,’ என ஷாக் தந்தார் அந்த நிர்வாகி.




என்ன சொல்றீங்க என அவரிடம் கேட்க, ‛ஆமாம் சார்… ஒரு கட்சியோட தலைவருக்கே நிர்வாகிகள் வேலை செய்யல; செய்ய விடல. அது தான் கோவை தெற்கில் நடந்தது. அதற்கு மூளையாக இருந்தவர் மகேந்திரன் தான்,’ என பெரிய குண்டை போட்டார். ‛அதில் அவருக்கு என்ன லாபம்? என நாம் கேட்க, ‛எல்லாமே லாபம் தான் சார்…. புரிஞ்சுக்கோங்க…’ என பேச்சை தொடங்கியவர், ‛பெரிய அளவில் நிர்வாகிகள் விலை போயிட்டாங்க சார்… கோவை தெற்கில் தலைவர் போட்டி, சிங்காநல்லூரில் மகேந்திரன் போட்டி போட்டாரு… எல்லாம் பக்கத்து பக்கத்துல தான். ஆனால் கூட இருந்தே குழி பறிக்கிற வேலை நடந்துருக்கு; கொங்கு அதிகார மையம் ஒருவர் மய்யத்திற்கு விரித்த வலையில் பலர் விழுந்திருக்கிறார்கள்.  




இது ஒரு கட்டத்துல தலைவர் கமலுக்கு தெரிஞ்சிடுச்சு. தேர்தல் சமயத்துல தேவையில்லாமல் பிரச்னை செய்து, மற்ற வேட்பாளர்கள் பணிக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் என அமைதியா வேலையை பார்த்தாரு. ஆனாலும் தேர்தல் முடிஞ்சதும் கண்டிப்பாக பலரை கழற்றி விடனும்னு அப்பவே முடிவு பண்ணிட்டாரு. உண்மைய சொல்லனும்னா, அதுக்கு சமயம் பார்த்துட்டு இருந்தாரு.


கோவை தெற்கில் பெற்றதெல்லாம் ஒரு தோல்வியா சார்? தோற்கடிக்கப்பட்டோம்னு தான் சொல்லனும். கமலை காலி பண்ணனும்னு ஒரு பெரிய திட்டம் நடந்திருக்கு. வெளியில் இருந்தெல்லாம் யாரும் வரலை; உள்ளே இருக்கவங்களை வெச்சே கதையை முடிச்சிட்டாங்க. அதனால் யோசிக்காம சம்மந்தப்பட்டவங்களை தூக்க கமல் ரெடியானார். அதில் முதலில் இருந்தவர் மகேந்திரன் தான். விசயம் தெரிஞ்சு தான் அவரே போயிட்டார், அவரோட போனவங்களும் அல்ரெடி லிஸ்டில் இருக்கிறவங்க தான். தேர்தல் தான் பிரச்னையே தவிர வேறு எதுவும் இல்லை,’ என முடித்துக் கொண்டார்.




திராவிட கட்சிகளின் அரசியலில் ஆள்மாறுவது, கட்சி மாறுவது, விலை போவதெல்லாம் நாம் பார்க்காத ஒன்றல்ல. ஆனால் மநீமவிற்கு இது புதிதாச்சே. அதுவும் ஒரு தலைவருக்கு எதிரான அரசியல் சதி என்பதெல்லாம் தமிழகத்திற்கே புதிது தான். ஆனால் வெளியேறிய மகேந்திரன் கூறும் காரணங்கள் வேறு மாதிரி இருக்கிறது.


‛கடந்த ஒரு ஆண்டாகவே கமல் கட்சி நடத்தும் விதம் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார். அவரின் ஆலோசர்களின் கருத்துப்படி கமல் நடந்து கொள்ளும் விதத்தில் ஜனநாயகம் இல்லை என்கிறார். பலர் கட்சிக்கு உழைத்திருக்கிறார்கள், அவர்களுக்காக அமைதி காத்தேன் என்கிறார். அவரது நிலைப்பாடு மாறப்போவதில்லை என்பதால் வெளியேறுகிறேன் என்கிறார். போகிற போக்கில் இன்னொன்றையும் கொளுத்திவிட்டுச் சென்றுள்ளார் மகேந்திரன். ‛தமிழகத்தை சீரமைப்பது இருக்கட்டும்; முதலில் கட்சியை சீரமையுங்கள்,’ என கமலுக்கு அறிவுரை வழங்கிச் சென்றிருக்கிறார்.


அப்படி என்ன சீரமைப்பு தேவைப்படுகிறது மக்கள் நீதி மய்யத்தில்? கமல் கட்சியில் ஜனநாயகம் இல்லையா? கட்சியில் பிறரை தலைதூக்க விடாமல் பார்த்துக் கொண்டாரா மகேந்திரன்? கமல் தரப்பின் விளக்கத்தை கேட்க மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுச்சாமியிடம் கேட்ட போது,




‛‛தலைவர் கமல் எப்போதும் எளிமையை விரும்புறார். அதனால் தான் பணம் படைத்தவர்களுக்கு வழங்காமல், என்னைப் போன்ற ஏழைகளையும் வேட்பாளராக போட்டியிட வைத்தார். நான் எப்போதும் தலைவரிடம் நேரடி தொடர்பில் இருந்தேன். இதனால் மகேந்திரனுக்கு எனக்கு பெரிய தொடர்பில்லை. ஆனால் தேர்தலில் சில குற்றச்சாட்டுகள் இருந்ததாக எனக்கும் தகவல்கள் வந்தன. கமல், கட்சி துவங்க வேண்டும் என முதலில் கோரிக்கை வைத்தது நான் தான். அவர் தலைமையில் தான் நாங்க இருப்போம். யாரும் கட்சியிலிருந்து வெளியேறவில்லை. அனைவரும் அவருடன் தான் இருக்கிறோம். ஒரு தோல்வி வரும் போது கட்சியை கட்டமைக்க வேண்டிய கடமை தலைவருக்கு உள்ளது. அதை தான் கமல் செய்துள்ளார். அவருடன் அனைவரும் நிற்போம்,’’ என்றார்.




இருதரப்பு பரஸ்பர குற்றச்சாட்டுகளை வைத்து பார்க்கும் போது, மய்யம் மாயமாவதற்கான வேலைகள் நடப்பதை நம்மால் உணர முடிகிறது. அதற்கு கோவை தெற்கு தான் மூல காரணம் என்பதும் தெளிவாக தெரிகிறது. தெற்கு தேய்கிறது என தமிழகம் இதற்கு முன் கேள்விப்பட்டதுண்டு; மய்யமோ தெற்கால் தோய்கிறது போலும்!