சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். பின்னர் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி ஆணையர் ரஞ்சித் சிங், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, "மாநகராட்சி பகுதிகள் சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள புறம்போக்கு நிலத்திற்கு பட்டா அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாடு அரசு பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்னும் பத்து நாட்களுக்குள் கணக்கெடுப்பு நடத்தி பட்டா வழங்கப்படும்" என தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், "முதல்வரின் காலை உணவு திட்டத்தில் 20 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருவதாகவும், இத்திட்டத்தை அண்டை மாநிலமான தெலுங்கானா மட்டுமல்லாது கனடா நாட்டிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல் பல்வேறு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சேலத்தில் 10 லட்சத்து 44 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கூட்டுறவு துறை சார்பில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு ரூ.2970 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் இந்த முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்றார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், "எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதால் ஏதேதோ உளறுகிறார். தேர்தல் நேரத்தில் முதல்வரால் பெறப்பட்ட மனுக்களில் 90% நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி எதையும் நிறைவேற்றாததால் மனுக்கள் குவிகிறது. அவரது சொந்த தொகுதியில் மட்டும் 3 ஆயிரம் மனுக்கள் இதுவரை வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பேசுவதை பற்றி எல்லாம் நாங்கள் கவலை கொள்வதில்லை. கலைஞர், அண்ணா வழியில் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றி வருகிறோம்" என்று கூறினார்.