நெல்லை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது, இதில் மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 44 வார்டுகளில் பெரும்பான்மையை கைப்பற்றி மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. இருப்பினும் குதிரை பேரம் கட்சி தாவலுக்கு வழிவகுக்க கூடாது என கருதிய திமுக மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் தேர்தல் முடிந்து வெற்றி சான்றிதழ் வாங்கிய உடனேயே வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்களை காரில் கேரளா ரிசாட்டுக்கு அழைத்து சென்று அங்கு தங்க வைத்து உள்ளார். இரண்டாம் தேதி நடைபெறும் பதவியேற்புக்கு அவர்களை அழைத்து வருவதோடு மீண்டும் அவர்களை கையோடு கேரளா அழைத்து செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், 4 ஆம் தேதி நடைபெறும் மறைமுக மேயர் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு அன்று மீண்டும் அழைத்து வர இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.


இது ஒரு புறம் இருக்க 3 நகராட்சிகளான அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு நகராட்சியில் அம்பாசமுத்திரத்தில் உள்ள 21 வார்டுகளில் 15 இடங்களில் திமுக வெற்றி பெற்று கூட்டணிகள் ஆதரவோடு இதனை கைப்பற்றியது, அதேபோல  விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில்13 இடங்களில் திமுக வெற்றி பெற்று கூட்டணிகள் ஆதரவோடு அதனையும் கைப்பற்றியது, களக்காடு நகராட்சியில் மட்டும் திமுகவை விட சுயேச்சைகள் அதிகம் வெற்றி பெற்றதால் இழுபறி நிலவி வந்தது. 



குறிப்பாக களக்காடு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக 10 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 11 இடத்திலும் அதிமுக 6 இடத்திலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  3 ஆவது வார்டு  வேட்பாளர் இஸ்ரவேல், 7 ஆவது வார்டு வேட்பாளர் சோமசுந்தரி,  6 ஆவது வார்டு வேட்பாளர்  முருகபெருமாள், 10 ஆவது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சாந்தி ஆகிய 5 பேர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதனால் களக்காடு நகராட்சியில் திமுக பலம் உயர்ந்து உள்ளது.  

 


அதே போல 17 பேரூராட்சிகளில் 16 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றிய நிலையில் திசையன்விளை பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியது, இங்குள்ள 18 வார்டுகளில் 9 வார்டுகளில் அதிமுகவும், 3 சுயேச்சை, 2 திமுக, 2 காங்கிரஸ், 1 தேமுதிக, 1 பாஜகவும் வெற்றி பெற்றது, இந்த சூழலில் தான்  நெல்லையில் அதிமுக வசமுள்ள இந்த பேரூராட்சியை கைப்பற்ற திமுக முனைப்பு காட்டி வருவதாகவும், தங்கள் கட்சி வேட்பாளர்களை மிரட்டி வருவதோடு அவர்களை கடத்த வாய்ப்பிருப்பதால் பாதுகாப்பு கேட்டு அதிமுக மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளார், இது குறித்து அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,  திசையன்விளை பேரூராட்யில் 9 அதிமுக வேட்பாளர்களும் 1 பாஜக வேட்பாளரும் வெற்றி பெற்று உள்ளனர்.


வரும்  4 ஆம் தேதி நடைபெற உள்ள தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தலில் மறைமுகமாக வாக்களித்து மெஜாரிட்டி பெறும் கட்சியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்,  திசையன்விளையில் பாஜக வேட்பாளரையும் சேர்த்து 10 பேர் என மெஜாரிட்டி இருப்பதால் எங்கள் கட்சியே வெற்றி பெறும் சூழல் உள்ளது, ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் எங்கள் கட்சி வேட்பாளரையும் பாஜக வேட்பாளரையும் அடியாட்களை வைத்து மிரட்டி முறைகேடாக எங்களது வேட்பாளர்களை கடத்தி 2 ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர், மேலும் எங்கள் கட்சி வேட்பாளர்களையும்,  3 சுயேச்சை உறுப்பினர்களையும் கடத்தி சென்று மிரட்டல் விடுப்பதாக தெரிய வருகிறது, எனவே 2 மற்றும் 4 ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் எங்களது கவுன்சிலர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டு உள்ளார்,