110 விதியின் கீழ் அயோத்திதாசருக்கு மணிமண்டபம், பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். ஒவ்வொரு முறை ஆட்சியின் போது 110 விதிகளின் கீழ் அறிவிப்புகள் வருகின்றன. 110 விதி என்றால் என்ன? இந்த விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியாகும்போது ஏன் விவாதிக்கப்படுவதில்லை என்பதைத் தற்போது காணலாம்.
பொதுவாக மக்களுக்காக கொண்டுவரப்படும் எந்த ஒரு திட்டமும் அமல்படுத்தப்படும் முன்பு சட்டமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்படும். ஆனால் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அரசால் முன்மொழியப்படும் திட்டம் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்தால் நேரம் வீணாகும் அல்லது அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும் என அரசு கருதும் போது 110 விதியை பயன்படுத்தலாம். அப்படி 110-விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் பற்றி அவை உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கவோ, விவாதிக்கவோ முடியாது.
2011ல் ஜெயலலிதாவின் அஸ்திரம்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது 1991 ஆட்சிக்காலத்தின்போதோ அல்லது 2001 ஆட்சிக்காலத்திலோ 110 விதியை பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. ஆனால் தனது 2011 முதல் 2016 வரையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இந்த விதியின் கீழ் 1,72,196 கோடி ரூபாய் செலவில் 187 அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த நேரத்தில்தான் சென்னை க்வீன் மேரிஸ் கல்லூரி வளாகத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் எனும் அறிவிப்பை 110 விதியின் கீழ் அறிவித்தார். அப்போது சபாநாயாகராக இருந்த தனபால் 2011 முதல் 2015 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் 181 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன என தெரிவித்து அதனை கின்னஸ் சாதனை என பாராட்டினார். .
ஜெயலலிதாவைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக்காலத்தில் 110 விதியின் கீழ் 453 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆனால் முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஆகியோரது ஆட்சிக்காலங்களில் அவசர காலங்களின் போதும் முக்கியமான வளர்ச்சி திட்டங்களில் அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுமே பயன்படுத்தப்பட்டன. அப்போதெல்லாம் பெரும்பாலும் பட்ஜெட் அறிவிப்பின் போதே திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
பி.டி.ஆர்., விமர்சனம்!
இந்நிலையில் தற்போதைய நிதியமைச்சர் பிடிஆர் கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என விமர்சித்த்துள்ளார். இந்த விதியின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்படாத திட்டங்கள் குறித்து விரைவில் சட்டப் பேரவையில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
110 விதி குறித்து அரசியல் விமர்சகர்கள் பேசுகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்காக திட்டங்களை தீட்டும்போது மக்களுடன் அதாவது மக்களின் பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து விவாதித்து அறிவிப்பதே சிறந்தது, அதுவே ஜனநாயகம் என தெரிவிக்கிறார்கள்.