அதிமுக ஆட்சியில் ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி என அதிமுக பொதுச்செயளாலர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். 


முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “ அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சரின் செயல்பாடு சிரிப்பைத்தான் வரவைக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு அமைச்சரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்காமல், அமைச்சராகவே தொடரவைப்பது அரசியல் நாகரீகமல்ல. ஊழல் குற்றம் செய்தவர் எந்த கட்சியாக இருந்தாலும் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிப்பது தான் அரசியல் நாகரீகம். கடந்த கால வரலாற்றை பாருங்கள், திமுக ஆட்சியில் அதாவது கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில், அருணா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட போது, அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். என்.கே.கே.பி ராஜா நிலம் அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்டபோது அவரையும் கலைஞர் அமைச்சரவையில் இருந்து விடுவித்தார். அதேபோல், அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அக்ரி கிருஷ்ணன் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு வந்த போது அவர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவையெல்லாம் தமிழகத்தின் கடந்த கால வரலாறு” என கூறினார்


மேலும் அவர், “தமிழ்நாட்டிற்கு என அரசியல் நாகரீகம் இருக்கிறது. அதனை கடைபிடித்தால் பொதுமக்கள் அரசியல்வாதிகளை நம்புவார்கள். கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஒருவர், செந்தில் பாலாஜி தற்போது சிறைகைதி தான், அவருக்கு சிறைக் கைதி எண் கொடுப்பட்டுவிட்டது. சிறையில் இருப்பவர் அமைச்சராக தொடர்ந்தால் எப்படி சரியாக இருக்கும்.  இப்படி செய்தால் மக்கள் எப்படி அரசியல்வாதிகளை மதிப்பார்கள்?  இதுவொரு மோசமான முன்னுதாரணமாக பார்க்கிறோம்,  எனவே திமுக தலைவரும் இன்றைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரீகம் கருதி உடனடியாக செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்” என கூறினார். 


மேலும் அவர், “ இது ஜனநாயக நாடு,  நடிகர் விஜய் அவருடைய கருத்தைச் சொல்ல அனைத்து உரிமையும் உண்டு. வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 இடங்களிலும், பாண்டிச்சேரியில் ஒரு இடமும் என முழுவதும் கைப்பற்ற அதிமுகவினர் முழுமையான பணிகளை செய்து வருகின்றனர்” எனவும் அவர் கூறினார். 


நீட் தேர்வு குறித்த கேள்விக்கு, நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட காலம் முதல் அதிமுக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு  கொண்டுவரப்பட்டது என கூறினார்.