பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் இடையே டிவிட்டரில் காரசாரமான கருத்து மோதல் ஏற்பட்டது.


பாஜக நிர்வாகி கைது:


மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தொடர்பாக அவதூறு பரப்பியதாக, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.


பிரச்னை என்ன?


மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. அது கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது எனவும், அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கள்ளமௌனம் காக்கிறார் எனவும் எஸ்.ஜி. சூர்யா குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மத்திய அமைச்சர்கள் கருத்து:


இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் “ எஸ்.ஜி.சூர்யாவின் கைது கண்டனத்துக்குரியது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு, அதுவும் முக்கியமான சமூகப் பிரச்சினையில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்து போராடுவோம்” என குறிப்பிட்டு இருந்தார்.  மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும், தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தனர்.


பதிலடி தந்த சு. வெங்கடேசன்:


இதற்கு பதிலளித்த சு. வெங்கடேசன் “பொய்யையும், பீதியையும் பரப்புவதா ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரின் வேலை? மதுரை மாவட்டத்தில் பெண்ணாடம் என்ற பேரூராட்சி இருக்கிறதா? எனப் பார்த்துவிட்டு கூட கருத்துச்சொல்ல முடியாதா? வதந்தி உங்களின் ஆயுதம். உண்மை எங்களின் கவசம் என காட்டமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.


நிர்மலா சீதாராமன் பதில்:


இதற்கு பதிலளித்து இருந்த நிர்மலா சிதாராமன் ”எஸ்.ஜி. சூர்யா கைதானது ‘பொய்யா’? இல்லை கட்சி தொண்டர் சூர்யாவை  முதலமைச்சர் ஸ்டாலின் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பது ‘பீதியை பரப்புவதா’? ஒரு சமூக பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உழைப்பது நம் கடமை. இந்த உழைப்பிற்கு ஆயுதம் வேறில்லை. இதற்கு கவசம் தேவையில்லை. இதுவே உண்மை” என தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.


சு. வெங்கடேசன் தடாலடி:


இதற்கு விளக்கமளித்த சு. வெங்கடேசன் “மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே இல்லையே என்பதை தாண்டிச் செல்வது பொய்க்கு துணை போவதில்லையா, பீதிக்கு உதவி செய்வதில்லையா மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களே! ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது அபாண்ட பழி சுமத்துவதை நீங்கள் கண்டிக்க வேண்டாமா? உண்மையை கடப்பதும் பொய்யின் மாறுவேடமே” என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை பதிலளிக்கவில்லை.