அரசியல் சிந்தனை தளத்திலும் உலகம் முழுவதும் உள்ள சமூக இயக்கங்களிலும் தனது எழுத்துக்கள் வழியாகவும் கருத்துகள் மூலமாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் கார்ல் மார்க்ஸ். 205 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பிறந்து, மனித இன வரலாற்றில் வேறு எந்த சிந்தனைவாதியும் பெற்றிராத செல்வாக்கை பெற்று, அறிவு தளத்தில் தொடர் பேசுபொருளை உருவாக்கி வருகிறார்.


மார்க்ஸ் முன்மொழிந்த கம்யூனிசம்:


நவீன அரசியல், பொருளாதார தளத்தை கட்டமைப்பதில் மார்க்ஸ் முன்மொழிந்த கம்யூனிசம், வர்க்க போராட்டம் ஆகியவை முக்கிய பங்கு வகித்தாலும், சமீப காலமாக கம்யூனிசம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், கம்யூனிசம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அம்பேத்கர் தெரிவித்த கருத்து முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.


குறிப்பாக, மார்க்ஸை மனித இனத்தின் மிக பெரிய சீர்திருத்தவாதியான புத்தருடன் ஒப்பிட்டு அவர் வெளியிட்ட கட்டுரைகள் மிக முக்கியமானவை. மார்க்ஸ், புத்தர் ஆகிய இருவரின் பிறந்ததினமும் ஒரே நாளில் கொண்டாடப்பட்ட வரும் சூழலில், அதை பற்றி அறிந்து கொள்வது சரியாக இருக்கும்.


மதத்தை முற்றிலுமாக நிராகரிக்கும் மார்க்சியத்தை விட புத்தர் தேர்வு செய்த பாதை தலைசிறந்தது என அம்பேத்கர் கருதுகிறார். மகிழ்ச்சியான சமூகத்தை எப்படி கட்டமைப்பது என இருவரும் ஒரே கருத்தை தெரிவித்த போதிலும், இருவரும் தேர்வு செய்த பாதை வேறு வேறாக இருக்கிறது என்கிறார் அம்பேத்கர். அந்த வகையில், புத்தரே சிறந்தவர் என்ற கருத்துக்கு வருகிறார் அம்பேத்கர்.


புத்தர், மார்க்ஸ் ஆகியோருக்கு இடையேயான ஒற்றுமைகள்:


பௌத்தம் குறித்து பேசிய அம்பேத்கர், "மதத்தின் செயல்பாடு, உலகை மறுகட்டமைத்து, அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே தவிர அதன் தோற்றம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதை ஆராய்வது அல்ல என கூறுகிறார் அம்பேத்கர். தனியார் சொத்துரிமை ஒரு வகுப்பினருக்கு அதிகாரத்தையும் மற்றொரு வகுப்பினருக்கு துயரத்தையும் தருகிறது. சமூகத்தின் நலனுக்காக அந்த துயரத்தை அகற்றுவது அவசியம். அனைவரும் சமம்" என கூறியுள்ளார்.


"தத்துவத்தின் செயல்பாடு உலகை புனரமைப்பதே தவிர, உலகின் தோற்றம் குறித்து ஆராய்ந்து நேரத்தை வீணாக்குவது அல்ல. தனியார் சொத்துரிமை ஒரு வகுப்பினருக்கு அதிகாரத்தையும் மற்றொரு வகுப்பினரை சுரண்டுவதன் மூலம் துயரத்தையும் தருகிறது. சமுதாயத்தின் நன்மைக்காக தனியார் சொத்துரிமையை ஒழிப்பது அவசியம்" என மார்க்ஸ் குறித்து குறிப்பிடுகிறார் அம்பேத்கர்.


புத்தர், மார்க்ஸ் தேர்வு செய்த பாதை:


தனியார் சொத்துரிமையை ஒழிக்கும் பௌத்தத்தின் உறுதிப்பாடு என்பது உலக நன்மைக்காக புத்த துறவிகள் அனைத்து விதமான ஆசைகளை துறப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என கூறுகிறார் அம்பேத்கர். சொத்துகளை வைத்திருக்கும் புத்த துறவிகளுக்கான விதிகள், ரஷியாவில் உள்ள கம்யூனிச விதிகளை விட கடுமையாக உள்ளது என்கிறார் அம்பேத்கர்.


மகிழ்ச்சியான மற்றும் நியாயமான சமுதாயத்தை நிறுவ, தன்னை பின்தொடர்பவர்களுக்காக புத்தர் ஒரு பாதையை வகுத்ததாக கூறும் அம்பேத்கர், "தானாக முன்வந்து தனது பாதையை தேர்வு செய்பவரை அவரின் தார்மீக மனப்பான்மையை மாற்றுவதன் மூலம் மாற்றுவது புத்தர் ஏற்றுக்கொண்ட வழிமுறையாக உள்ளது. ஆனால், கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொண்ட வழிமுறைகள் தெளிவாக இருந்தாலும் குறுகியதாக இருக்கிறது. புத்தர், ஜனநாயகவாதியாக பிறந்து ஜனநாயகவாதி இறந்தார்.


ஆனால், கம்யூனிச கொள்கையின்படி, நாடு என்கிற கட்டமைப்பு நிரந்தர சர்வாதிகாரத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இதுவே, தங்களது பலவீனம் என்பதை கம்யூனிசவாதிகளே ஒப்பு கொள்கின்றனர்" என குறிப்பிடுகிறார்.