கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுகவை சேர்ந்த கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”அங்கன்வாடி மையங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிதாக ஆறு அங்கன்வாடி மையங்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளேன். தமிழகம் முழுவதும் அரசு அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்ய வேண்டும். அங்கன்வாடிப் பணியில் இருப்பவர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு நல்லவிதமான சம்பளத்தை கொடுக்க வேண்டும்.
சிறுவாணி நீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது. சிறுவாணி ஆற்றின் இடையில் தடுப்பணை கட்டும் கேரளா அரசின் செயல்பாட்டை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதற்கு துரைமுருகன் அதிகாரிகளை அனுப்பி பார்ப்போம் என்றார். ஆனால் இன்றும் வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவாணி அணையில் ஏற்கனவே நீர்மட்டத்தை உயர்த்த கேரளா அரசு ஒப்புக் கொள்ளாததால், நீர் வீணாக கடலில் கலக்கிறது. சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரளா அரசிடம் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் இன்னும் கோவைக்கு தண்ணீர் சிக்கல்கள் வரும். அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்படும்.
கருத்து சுதந்திரம் நாட்டில் உள்ளது. கருத்து சுதந்திரம் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. படங்களை படங்களாக பாருங்கள் என்று எத்தனையோ தடவை மாற்று கட்சியினர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இயங்கிக் கொண்டிருக்கிறார். அவர் கவர்னராக இருக்கின்ற காரணத்தினால் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தொடர்பாக ஆளுங்கட்சி விமர்சனம் எல்லை மீறிப்போகிறது. திமுக சித்தாந்தத்தை ஆளுநர் பேச வேண்டும் என ஆளுங்கட்சியினர் நினைப்பது முட்டாள்தனம்.
ஆளுநர் இளைஞர்கள் மாணவர்கள் மத்தியிலும் சமூக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பேசுகிறார். மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம், டீல் பண்ணுவோம் என தெரிவிப்பது அநாகரீகமானது கிடையாது. பிடிஆர் ஆடியோ பொய் என தெரிவித்தால் அவர்கள் புகார் கொடுக்க வேண்டும். ட்விட்டர், பேஸ்புக்கில் கருத்துக்கள் போட்டால் கைது செய்யும் அரசு ஆடியோ பொய் என தெரிவித்தும் அமைதியாக இருப்பது ஏன்? இதில் இருந்தே அது உண்மையான ஆடியோ என்பதை மக்கள் புரிந்து கொள்ளலாம். திராவிட மாடலில் எத்தனை தோல்வி உள்ளதை நாங்கள் சொல்கிறோம். ராஜ்பவனை லோக் பவன் என மக்கள் வரும் இடமாக மாற்றுகிறேன் என கவர்னர் சொல்வது நல்ல விஷயம். மது விற்பனைக்கு எந்த எல்லைக்கும் இந்த அரசு செல்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்