அமெரிக்காவின் அரசாங்க அமைப்புகள் பிரதமர் மோடிக்கு எதிரான பல அறிக்கைகளை வெளியிடும் நிலையில், அந்நாட்டு அரசியல்வாதிகள் மட்டும் அவரை கொண்டாடுவது ஏன் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது.


”3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி அமெரிக்க சென்ற நிலையில் அங்குள்ள அரசியல்வாதிகள், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் என பெருமை பேசினர். உலகையே இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து மேம்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்திய வம்சாவளியினர் பெரும்பாலானோர் அவரது வருகைக்கு பெரும் ஆதரவு தெரிவித்தனர். அதேநேரம், பிரதமர் மோடிக்கு அங்குள்ள பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றும்போது போராட்டங்களிலும் ஈடுபட்டனர். குறிப்பாக சிறுபான்மையினருக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளனர்”


அமெரிக்காவில் மோடி:


இந்திய பிரதமராக  மோடி பொறுப்பேற்ற பின்பு பலமுறை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், முதன்முறையாக அந்நாட்டு அரசின் அழைப்பை ஏற்று, 3 நாள் சுற்றுப்பயணமாக அண்மையில் அமெரிக்கா சென்றார். அதன் முக்கிய அம்சமாக, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.


மோடியின் உரைக்கு குவிந்த பாராட்டுகள்:


அவையில் மோடி நுழைந்ததுமே அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ”மோடி மோடி” என முழக்கமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகள் தொடர்பாக மோடி பேசியபோது, இந்தியா என்பதை 37 முறையும், அமெரிக்கா என்பதை 18 முறையும், ஜனநாயகம் என்பதை 14 முறையும் குறிப்பிட்டார். அந்த உரையின்போது 15 முறை எம்.பிக்கள் எழுந்து நின்று மோடியின் உரையை கைத்தட்டி பாராட்டினர்.   


பைடனுக்கு எழுதப்பட்ட கடிதம்:


நாடாளுமன்றத்தில் இப்படியாக மோடி கொண்டாடப்பட, ஆளும் கட்சியை சேர்ந்த 75 எம்.பிக்கள் அதிபர் பைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதினர். அதில், பல்வேறு ஆய்வறிக்கைகளை மேற்கோள்காட்டி ”இந்தியாவில் நிலவும் சுதந்திரமான அரசியலுக்கான வாய்ப்புகள் நசுக்கப்படுவது, மதசகிப்புத்தன்மை குறைந்து வருவது, மனித உரிமைகள் பறிக்கப்படுவது,  மக்களுக்கான அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், இணைய அணுகல் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவை தொடர்பாக, மோடியிடம் தனிப்பட்ட முறையில் விவாதிக்க வேண்டும்” என அதிபர் பைடனுக்கு வலியுறுத்தி இருந்தனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜெயபால் எனும் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு இருந்தார்.


”இந்துத்துவாவை ஊக்குவிக்கும் மோடி”


மோடியின் உரையை அதிபர் பைடன் கட்சியை சேர்ந்த 6 எம்.பிக்கள் புறக்கணித்தனர். அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ”பிரதமர் மோடியை அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்ததே பத்திரிகையாளர்கள் மற்றும் சிறுபான்மையினரின் குரல்கள் நசுக்கப்பட்டதற்கு சமம். நாட்டின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில், மோடியை பேச அனுமதித்துள்ளீர்கள். அரசியல் லாபத்திற்காக இந்த பெரிய தியாகத்தை செய்ய வேண்டிய அவசியமில்லை.  மோடி அரசு, வன்முறையை கையாளும் இந்து தேசியவாத குழுக்களை ஊக்கப்படுத்துவதோடு, அரசியல் எதிரிகளை சிறையில் அடைப்பதாகவும்” சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர்.


வெள்ளை மாளிகை வளாகத்தில் போராட்டம்:


வெள்ளை மாளிகை வளாகத்திலும் பிரதமர் மோடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ”no to modi, not welcome modi” என்பது போன்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபான்மையினரை மோடி வஞ்சிப்பதாகவும் முழக்கங்களை எழுப்பினர்.


இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அவசியம்:


பிரதமரின் அமெரிக்க வருகை தொடர்பாக பேசியிருந்த முன்னாள் அதிபர் ஒபாமாவும் “நான் பிரதமர் மோடியுடன் உரையாடி இருந்தால் இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கவில்லை என்றால், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது  என வலியுறுத்துவேன்” என குறிப்பிட்டு இருந்தார்.


எதிரான ஆய்வறிக்கைகள்:


இதனிடையே, அமெரிக்க அரசு அமைப்புகள் வெளியிடும் பல்வேறு ஆய்வறிக்கைகளும் மோடி அரசுக்கு எதிராக தான் அமைந்துள்ளன. குறிப்பாக மதபிரச்னைகள் இந்தியாவில் அதிகரித்துளது, வெறுப்பு அரசியல், எதிர்க்கட்சியினர் மீதான கைது நடவடிக்கை, மனித உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்படுவது, சிறுபான்மையினர் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர் என்பது தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க அரசு அமைப்புகளின் ஆய்வறிக்கைகள் முன்வைக்கின்றன.


அரசியல்வாதிகள் பாராட்டுவது ஏன்?


பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அமெரிக்க அரசியல்வாதிகள் அவரை பாராட்ட ஒரே காரணம் இந்தியா கொண்டுள்ள பிரமாண்ட வணிக சந்தை தான் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். 140 கோடி மக்கள் தொகையுடன் உலகின் மாபெரும் சந்தையாக விளங்குகிறது இந்தியா. அப்படி இருக்கையில் அந்த வணிக வாய்ப்பை உலகின் பெருநிறுவனங்களை கொண்ட அமெரிக்கா எப்படி தவற விடும்.


ஆயுத வியாபாரம்:


அதோடு, அமெரிக்காவின் பெரும் வணிகம் என்பதே அதிநவீன ஆயுதங்களின் விற்பனை தான். எல்லையில் பாகிஸ்தான் மற்றும் சீனா உடன் பதற்றமான உறவையே வைத்துள்ள இந்தியாவிற்கு, அதிகப்படியான ராணுவ தளவாடங்கள் என்பது அவசியம். அந்த வியாபாரத்தை கைப்பற்றுவதும் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. உக்ரைன் உடனான போரால் ரஷ்யா பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அந்நாட்டுடனான இந்தியாவின் ஆயுத வியாபாரத்தை தனதாக்கவும் அமெரிக்கா முயன்று வருகிறது.


”தீராத ஆசை”


இறுதியாக உலகின் அண்ணாச்சியாக திகழ வேண்டும் என்பது அமெரிக்காவின் தனியாத விருப்பம். ஆனால், அதற்கு பெரும் சவாலாக இருப்பது ஆசிய கண்டத்தை சேர்ந்த சீனாவின் அபார எழுச்சி தான். அந்த சீனாவை ஒடுக்க வேண்டுமானால் அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஆதரவு என்பது அத்தியாவசியமானது. அதனால் தான், ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பதை போல, அமெரிக்காவில் எந்த கட்சி ஆண்டாலும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.