கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த பல்வேறு எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெற நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் எந்த கூட்டணியில் எந்த கட்சி இடம்பெறும் என்பது தெளிவாகவில்லை.


கே.சி.ஆர் செயல்பாடுகளில் மாற்றம்:


ஆனால், அதற்கு முன்பாக பல திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. பாஜகவை வீழ்த்த பல்வேறு தலைவர்கள் பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ். தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொண்டவர்.


ஆனால், இப்போது கதையே வேறு. ஒரு காலத்தில் பாஜக எதிர்ப்பில் தீவிரமாக இருந்த சந்திரசேகர ராவின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட தொடங்கியுள்ளது. சமீபத்தில், வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஹைதராபத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால், அதில் கூட பங்கேற்காமல் தனது எதிர்ப்பை பதிவு செய்தவர் கே.சி.ஆர்.


பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்த கே.சி.ஆர், பிரதமர் மோடியை நல்ல நண்பர் எனக் குறிப்பிட்டு திடீரென அதிர்ச்சி தந்தார். இதை தொடர்ந்து, 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட பாட்னா கூட்டத்தை புறக்கணித்தது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்தது. பாஜகவுடன் கே.சி.ஆரின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி நெருக்க காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.


இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதிநிதியை அனுப்பியுள்ளது பாரத் ராஷ்டிர சமிதி. கடந்த இரண்டு வருடங்களாக, மத்திய அரசு கூட்டும் கூட்டங்களை அக்கட்சி புறக்கணித்து வந்தது. இந்த சூழ்நிலையில், கே.சி.ஆரின் இந்த நடவடிக்கை பாஜகவை நோக்கி அவர் செல்கிறாரா? என சந்தேகத்தை கிளப்பியுள்ளது.


மாறுகிறதா கூட்டணி கணக்கு:


தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒரு மித்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கை ஆற்றி வந்த கே.சி.ஆர், தற்போது மாநில அரசியலில் மீண்டும் தனது கவனத்தை திருப்பியுள்ளார். குஜராத் மாடலை கடுமையாக விமர்சித்து வந்த கே.சி.ஆர், பல்வேறு விவகாரங்களில் அமைதி காத்து வருகிறார். 


இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நேற்று பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வந்தபோது, கே.சி.ஆரின் மகனும் தெலங்கானா அமைச்சருமான கே.டி. ராமா ராவ், டெல்லிக்கு சென்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துள்ளார். அடுத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.


டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கே.சி.ஆரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளது. இரண்டு குற்றப்பத்திரிகைகளில் அவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவர் கைது செய்யப்படுவார் என்றெல்லாம் தகவல் வெளியானது. கே.சி.ஆரின் செயல்பாடுகளில் மாற்றம் தென்படுவதற்கு இதுவே காரணம் என சொல்லப்படுகிறது.


இதற்கிடையே, இந்தாண்டின் இறுதியில் தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. பாஜகவுடன் கே.சி.ஆர் நெருக்கம் காட்டுவது அதிகரித்தால் இது அவரின் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குறிப்பாக, அண்டை மாநிலமான கர்நாடகாவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு, இது நல்ல வாய்ப்பாக மாறிவிடும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.