அரியலூர் மாணவியை மதமாற்றம் செய்ய முயற்சித்ததால் உயிரிழந்ததாக, அவர் இறப்பிற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் அவரது  குடும்பத்திற்கு நிதிஉதவி கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னையில் நேற்று   பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது அவர் அதிமுகவை விமர்சித்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக நேற்று அவர் கூறும் பொழுது, சட்டமன்றத்தில் அதிமுகவினர் ஆண்மை அற்றவர்களாக உள்ளனர். எதிர்க்கட்சியாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மட்டுமே எப்போதும் தைரியமாக பேட்டி அளித்து வருகிறார் எனக் கூறி இருந்தார். 




இதற்கு அதிமுக சார்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் நமது ABP செய்தியாளரிடம் தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்து இருந்தார்.  இந்த சூழலில் தனது முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய பேச்சு உள்நோக்கம் அற்றது என்றும் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது  எனவும் வருத்தம் தெரிவித்து நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டு இருந்தார். 




 


இந்த நிலையில் வண்ணாரப்பேட்டையில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறும்போது, தமிழகத்தில் பிஜேபி கட்சிக்கு தொண்டர்களே இல்லை, குறிப்பாக தென்காசி கன்னியாகுமாரி கோயம்புத்தூர் ஆகிய பகுதியில் மட்டும் சில தொண்டர்கள் உள்ளனர். ஆனால் நெல்லை சட்டமன்ற தேர்தலில் அதிமுக தொண்டர்கள் உழைத்தால்தான் நயினார் நாகேந்திரன் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், ஆனால் இப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்மை உள்ளதா என கேள்வி எழுப்பி உள்ளார்.


சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் வாய்திறக்க வில்லை எனவும் தெரிவித்து வருகிறார். இதுபோன்ற நயினார் நாகேந்திரன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மிக தரக்குறைவாக பேசி வருகிறார். எங்கள் தயவால் எங்கள் ஆதரவால் தாமரை சின்னத்தை நாங்கள் தூக்கி நிறுத்தி வெற்றிபெற வைத்தோம். ஆனால் எங்களைப் பற்றிய நயினார் நாகேந்திரன் இப்படி பேசி வருகிறார். அதிமுகவை விமர்சனம் செய்ய நயினார் நாகேந்திரனுக்கு தகுதி இல்லை. நெல்லை வரும்போது அதிமுக தொண்டர்கள் அனைவரும்  கருப்பு கொடி காட்டுவோம். அதிமுக கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது


2001 ஆம் ஆண்டு மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட நயினார் நாகேந்திரன் அப்போது தொழில்துறை, மின்சாரத்துறை, ஊரக தொழில்துறை உள்ளிட்ட அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால் இப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்மை இருக்கிறதா என கேட்கக்கூடிய கேள்விக்கு நாங்கள் ஒரே பதிலை சொல்கிறோம்,




நயினார் நாகேந்திரன்  வேண்டுமானால் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் இதே தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறட்டும், அப்போது நாங்கள் அவருக்கு ஆண்மை இருக்கிறது என சொல்வோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபி யோடு நாங்கள் கூட்டணி வைத்தால் தான் இவ்வளவு பெரிய படுதோல்வி அடைந்து உள்ளோம், இதற்கு காரணமே பிஜேபி கட்சி தான் என்று தெரிவித்தார்.