ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றி வெற்றி பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது தீவிர ரசிகர்களை தன்னுடன் வைத்துக் கொண்டு, முக்கியப் பொறுப்புகளை அவர்களுக்கு வழங்கி, சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்று அழகு பார்த்தவர். காலத்தின் கோலத்தில் பலர், அவரிடமிருந்து விலகி மாற்றுப்பாதை சென்றனர். இன்னும் ஒருவர் மட்டும் அவருடன் பயணித்து வருகிறார். அவர் தேமுதிக துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பார்த்தசாரதி. ஆரம்பத்திலிருந்து விஜயகாந்த் உடன் பயணித்து வரும் அவர், தனித்து தொடங்கிய போது, தனிமைப்படுத்தப்பட்டது வரை தேமுதிகவும், விஜயகாந்தும் சந்தித்தவற்றை  கலாட்டா இணையத்திற்கு மனம் திறந்து பேசியுள்ளார். இதோ அந்த பேட்டி...


 



பார்த்தசாரதி, தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ.,


‛‛விஜயகாந்திற்கு அதிக மன்றம் இருப்பது கடலூரில் தான். கடலூர், விழுப்புரம் சென்றால், விஜயகாந்திற்கு அவ்வளவு கூட்டம் கூடும். நாங்கெல்லாம் விஜயகாந்த், மதுரையில் அல்லது அருப்புக்கோட்டையில் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்திருந்த போது, அவர் விருத்தாச்சலம் சென்றார். அதை யாருமே எதிர்பார்க்கவில்லை. சேலத்தில் உரிமை மீட்பு மாநாடு நடத்திய, தொண்டர்கள் விருப்பத்தின் பேரில் தான் அதிமுக உடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார். 


தமிழ்நாட்டில் எந்த அனுதாபமும் இல்லாமல் அதிமுக 203 சீட்டுகளை வென்றது. அதில் விஜயகாந்த் மீது ஜெயலலிதாவுக்கு அவ்வளவு அன்பு ஏற்பட்டது. ஜெயலலிதா-விஜயகாந்திற்கு சண்டை என்று தான் எல்லோருக்கும் தெரியும், ஆனால், உள்நோக்கம் யாருக்கும் தெரியாது. 




சென்னை பல்கலையில் 32 அமைச்சர்கள் பதவியேற்பு. எங்களுக்கும் அழைப்பு வந்தது. விஜயகாந்துடன் சென்றோம். பயங்கர கூட்டம். பல்கலை வாயிலில் விடமாட்டேன் என்கிறார்கள். ஒரே கெடுபிடி. நான் தான் போலீசாரிடம் சென்று, விடச்சொன்னேன், எங்களை விட்டுவிட்டார்கள். உள்ளே சென்றதும், சோ அமர்ந்திருந்தார். அவர் அருகில் அன்றைய குஜராத் முதல்வர் மோடி அமர்ந்திருந்தார். 


‛தமிழ்நாடு கிங் மேக்கர்’ என்று மோடியிடம் சோ அறிமுகம் செய்தார். தேர்தல் முடிவு மாற காரணம் இவர் தான் என சோ சொன்னதும், ‛நீங்கள் கட்டாயம் குஜராத் வரணும்... என் வீட்டிற்கு வரணும்’ என விஜயகாந்தை கட்டி அணைத்து அழைப்பு விடுத்தார் மோடி. அதன் பின் அங்கிருந்து நகர்ந்த போது சசிகலா நின்று கொண்டிருந்தார். எங்களை அவர் அமர சொன்னார், ‛பரவாயில்லை.. நீங்க இருங்க...’ என்று கூறி, நாங்கள் அருகில் அமர்ந்து கொண்டோம். 


அதன் பின் ஜெயலிதா வந்தார், பதவியேற்று முடிந்த பின், அனைவரிடம் வந்து வாழ்த்துக்களை பெற அவர்கள் தரும் சால்வைகளை ஜெயலலிதா பெற்றுக்கொண்டிருந்தார். விஜயகாந்திடம் வரும் போது, அவர் குணிந்து ஏதோ கூற, ஜெயலலிதாவும் குணிந்து அதை கேட்டார். இதை அனைவரும் பார்த்தனர். பின்னர் அவர் மட்டும் தான் சால்வை விரித்து ஜெயலலிதாவுக்கு போர்த்தினார். அவரும் மகிழ்வுடன் அதை பெற்றுக் கொண்டார். இதுவரை யாரும் அந்த மாதிரி சால்வை போட்டதில்லை.




அதன் பின் ஓபிஎஸ்.,யிடம் கூறி விஜயகாந்தை தாஜ் ஓட்டலுக்கு அழைத்து வரச் சொல்லிவிட்டு ஜெயலலிதா கிளம்பி விட்டார். நாங்க கிளம்பிக் கொண்டிருக்கிறோம்... வாசலில் ஓபிஎஸ் நிற்கிறார். விவரத்தை எங்களிடம் அவர் கூற, ‛நீங்க போங்க... நாங்க வர்றோம்...’ என்று விஜயகாந்த் கூறினார். ‛அய்யய்யோ... நீங்க இல்லாமல் நான் போகவே முடியாது...’ என ஓபிஎஸ் கூற, பின்னர் அங்கு சென்றோம். தாஜ் ஓட்டலில் 4 சேர் தான். ஜெயலலிதா, சோ, மோடி, விஜயகாந்த் மட்டுமே அங்கு அமர்ந்திருந்தனர். 


நான் விஜயகாந்திடம் நெருங்கி வந்த போது, என்னை அங்கிருந்த பாதுகாவலர்கள் தள்ளிப் போகச் சொல்லிவிட்டனர். அவ்வளவு நெருக்கமாக இருந்தவர்கள் தான் ஜெயலலிதாவும் விஜயகாந்தும். அதன் பின் நடந்த பிரிவெல்லாம், அவர்களுக்குள் முடிவு செய்தது தான். உள்ளுக்குள் ஒரு அரசியல் இருக்கிறது. ரொம்ப நெருக்கமாகிவிடுவார்கள் என்பதால், நடந்த ஒரு விதமான அரசியல் இருந்தது. 




சட்டமன்றத்தில் நடந்த சில வாக்குவாதம் தான், பிரச்சனை ஆனது. கோவை எம்.எல்.ஏ., சின்னசாமி ஒரு வார்த்தையை விட, விஜயகாந்த சூடாகிவிட்டார். அவர் எதார்த்தமா பேசுவார்; ஆனால் அதை கேட்கும் போது கோபமாக தான் தெரியும். அது தான் அந்த இடத்தில் பிரச்சனை ஆகிவிட்டது. 2016ல் திமுகவிடம் சென்றிருந்தால், கண்டிப்பாக எதிர்கட்சி தலைவர் ஆகியிருப்பார். எங்களுக்கு கூட அந்த வருத்தம் இருந்தது. 


விஜயகாந்த் முதல்வர் ஆவது தான் எங்கள் நோக்கம், மக்கள் நலக்கூட்டணியில் அதை முன்னெடுத்தனர். அதனால் அதை நாங்களும் ஏற்றோம். திமுக செல்லும் நோக்கம் தான் விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு இருந்தது. அதிமுக மாதிரி கூட்டணி பேச்சுவார்த்தை திமுகவில் இல்லை. ஒருவிதமான பிடிவாதம் அப்போது திமுகவிடம் இருந்தது. அதே பிடிவாதம் எங்களிடமும் இருந்தது. அது தான் கூட்டணி சேர முடியாமல் போக காரணம். 




விஜயகாந்திற்கு என்ன பிரச்சனை என்பதை பிரேமலதா, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூறிவிட்டார். அவருக்கும் 70 வயதாக போகிறது. ரஜினி, கமல் எல்லாம் ஒரு படம் நடித்தால் இடைவெளி விடுவாங்க. விஜயகாந்த் எந்த இடைவெளி இல்லாமல் ஓய்வு இல்லாமல் படத்தில் நடித்து உடலை வீணடித்து விட்டார். வெளியில் சென்றதும் இல்லை. இதனால் உடல்நிலை மோசமானது. 


குரல் பேசுவதும், நடிக்க முடியாததும் தான் இப்போதைக்கு அவருக்கு பிரச்சனை. காலையில் எழுந்து டிவி பார்க்கிறார், சாப்பிடுகிறார். மாலையில் சைக்கிள் மிதிக்கிறார். இப்படி தான் அவரது பொழுது போகிறது. அவருக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. குரல் வளத்தை மீண்டும் தருகிறேன் என லண்டன் டாக்டர் உறுதியளித்திருக்கிறார். 


விஜயகாந்த பேசாமல் இருப்பதை தாங்க முடியவில்லை. வீட்டில் தனியாக இருக்கும் போது கண் கலங்கும். விஜயகாந்த் கூட இருக்கும் நாங்கள் பெரிய பணக்காரர்கள் இல்லை. நாங்கள் நல்லா இருக்க வேண்டும் என நினைத்த மனுசன் அவர். என்னடா தெய்வம் ... என சிலநேரம் நினைப்பேன். அதிகமாக என் பெயரை தான் உச்சரித்தார்.




விஜயகாந்த் அடிப்பதெல்லாம் சாதாரண விசயம். எங்களை அடிப்பார், பின்னர் அமெரிக்கன் மட்டன் தோதை வாங்கித்தருவார். கூட்டம் கூடும் போது, அவர்களை கட்டுப்படுத்த அவருடன் நெருக்கமானவர்களை அடிப்பார். அதை பார்த்தால், மற்றவர்கள் விலகிவிடுவார்கள். உடன் இருப்பவர்களை மட்டும் தான் அவர் அடிப்பார்; மற்றவர்களை அவர் தொட்டதில்லை. 


விஜயகாந்த்தை நடிகராக பார்த்து நேசித்தவன் நான். எங்களை எம்.எல்.ஏ.,ஆக மாற்ற வேண்டிய அவசியம் அவருக்கில்லை. விருகம்பாக்கம் தொகுதியை பிரேமலதாவிற்கு தரப்போகிறோம் என்று ஜெயலலிதாவிடம் கேட்டு, எனக்கு வாங்கித் தந்தார். பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால், விஜயகாந்த் மீதான ஈர்ப்பு மாறாது. அதிமுக ஆட்சியிலேயே எங்களை விலைபேச முயற்சித்தார்கள். நான் விலை போகவில்லை,’’ என நெகிழ்ச்சியோடு அந்த பேட்டியில் பேசினார்.