வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாநகராட்சி, உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கம் நடத்தும் மாநில அளவிலான ஆண் மற்றும் பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்வு வாலிபால் விளையாட்டுப் போட்டியை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தொடக்கி வைத்தார். இன்று மற்றும் நாளை நடைபெறும் போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 150 பேர் பங்கேற்க உள்ளனர். முதல் பரிசாக 20 ஆயிரம், இரண்டாவது பரிசு 15000, மூன்றாவது பரிசு பத்தாயிரம், நான்காவது பரிசாக ஐந்தாயிரமும் வழங்கப்பட உள்ளது.


 




 


போட்டியை தொடக்கி வைத்த பின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியளிக்கையில், ”தமிழகத்தை எவ்வாறு அழைப்பது என்பது நமக்குத் தான் தெரியும், தமிழகம் என்பதற்கும் தமிழ்நாடு என்பதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால் தமிழ்நாடு என்பது தான் நம்முடைய நாடு, தமிழ்நாட்டைப் போலத்தான் ஆந்திரா ஒரு நாடு, பஞ்சாப் ஒரு நாடு, கேரளா ஒரு நாடு இவற்றையெல்லாம் உள்ளடக்கியது தான் இந்தியா, இந்தியா என்பது ஒரு தேசம் நாடுகளுடைய கூட்டமைப்பு தான் தேசம்.  ஆளுநர் ஒன்றை சொல்லிவிட்டார் என்பதற்காக நாம் கொதிப்படைய வேண்டாம், நாம் கொதிப்படைய வேண்டிய விஷயத்தை சொல்வதற்காக தான் இந்த ஆளுநர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


 





இந்துக்களுடைய பண்டிகைக்கு முதல்வர் வாழ்த்து சொல்வாரா? என பாஜக கேட்டுள்ளது. நான் சொல்கிறேன் தமிழர் திருநாள் எனக் கூறப்படும் பொங்கல் இந்து பண்டிகை தானே, பொங்கலுக்கு வாழ்த்து சொல்கிறோம் அல்லவா, அப்படி என்றால் பாஜக தமிழர் திருநாளை பொங்கலை தமிழர் பண்டிகையாக கருதவில்லையா? இது என்ன வெளிநாட்டில் இருந்து வந்த கலாச்சாரமா? பொங்கல் இந்து பண்டிகை தான் நாம் இந்துக்கள் தான் இந்து கலாச்சாரத்தில் தான் உள்ளோம். ஆனால் இவர்கள் எதற்காக முதல்வர் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்வாரா என சொல்கிறார்கள்.  அப்படியானால் நீங்கள் தான் இந்த நாட்டில் கலவரத்தை, வேற்றுமையை உருவாக்க விரும்புகிறீர்கள்.


 




நீங்கள் தான் பொங்கல் பண்டிகையை இந்து பண்டிகையாகவும், இந்து கலாச்சாரமாகவும் கருதவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள பாஜக தமிழ் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை அவர்கள் வேறு கலாச்சாரத்தில் உள்ளார்கள், எனவே அவர்கள் நமது கலாச்சார வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும். கமலஹாசன், ராகுல் சந்திப்பு என்பது வரவேற்கக் கூடிய ஒன்று, கமல்ஹாசன் ஒரு தேசிய உணர்வு உள்ள ஒரு தமிழர் நல்ல மனம் படைத்தவர் சீர்திருத்த கருத்துக்களை உடையவர். இன்றைய நிலையில் ராகுல் காந்தி தான் இந்தியா போன்ற தேசத்திற்கு தலைமை ஏற்க முடியும் என உறுதியாக நம்புகிறார். அதனுடைய வெளிப்பாடுதான் ராகுல் காந்தியோடு கமல்ஹாசன் நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். எனவே ராகுல் காந்தி கமல்ஹாசன் சந்திப்பை தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்கிறது பாராட்டுகிறது” என்றார்.