விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் “நிகரி விருது” வழங்கும் விழா உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் 7 ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு “நிகரி விருது” விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு அமைச்சர் பொன்முடி, எம் பி ரவிக்குமார் கலந்து கொண்டு வழங்கினர்.
சாதி ரீதியான செயல்பாடு:
விழா மேடையில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது, "எந்த கட்சியில் இருந்தாலும் ஜாதி ஒழிப்பு இருக்கனும். அடித்தளத்தில் உள்ள மக்கள் வளர, சம உரிமை பெறவும், அடித்தட்டு மக்களை ஒருங்கிணைப்பதற்காக அம்பேத்கர், பெரியாரோட இயக்கம் உருவாக்கப்பட்டது. சாதி என்பது வெறியூட்டுவதற்காக இருக்கக் கூடாது. இன்று பள்ளி, கல்லூரிகளில் சாதி ரீதியாக ஆசிரியர்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டு புகார்கள் அதிகளவில் தனக்கு வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் துணிச்சலான முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். திராவிட இயக்கம் 50 ஆண்டு காலமாக உள்ளதால் தான் இன்று அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், இளமையிலேயே சகோதரத்துவ, சமத்துவ உணர்வினை ஊட்ட வேண்டியது ஆசிரியர்களின் கடமை. ரொம்ப பேர் தற்போது சாதிய உணர்வுகளை வளர்க்கின்றார்கள். அந்த சாதியில் இருப்பவர்கள் சமமாக இருக்க வேண்டும் என்பதில் தவறில்லை. அதையே மாணவர்களிடம் ஊட்டி வெறியாக மாத்தி சண்டையாக மாத்த கூடிய எண்ணம் ஆசிரியர்களுக்கு வரக்கூடாது.
சமத்துவ மனப்பான்மை
தற்போது பள்ளி, கல்லூரிகளில் அதிகளவு சாதி ரீதியான புகார்கள் அதிகம் வருவதால் அதனை மழுங்கடித்து நாம் தமிழர்கள், மனிதர்கள் என்று உருவாக்கும் மனப்பாண்மை இருக்க வேண்டும். சமத்துவ ரீதியாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும்."
இவ்வாறு அவர் பேசினார்.