தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான உரசல்கள் தொடங்கிவிட்டன. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவரை ஆளுநராக நியமித்து, தமிழ்நாட்டில் இரட்டை ஆட்சியை உருவாக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது என திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் விமர்சித்தன.



ஆளுநர் ஆர்.என்.ரவி


அசராத ஆளுநர் ஆர்.என்.ரவி


ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி எதற்கும் அசரவில்லை தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் சனாதனம், சமஸ்கிருதம், மனு தர்மம், ஒரே நாடு, ஒரே கடவுள் என்ற வகையிலேயே பேசிவந்தார். இந்த நாடு யோகிகளாலும் சித்தர்களாலும் கட்டமைக்கப்பட்டது என்றும் மேடைகளிலேயே முழங்கினார். அவரின் ஒவ்வொரு கருத்திற்கும் திமுகவும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடுமான முரசொலி பதிலடி கொடுத்துக்கொண்டே இருந்தது.


ஆளுநரா ? சனாதன காவலரா ? – விமர்சித்த முரசொலி


ஆர்.என்.ரவி ஆளுநரா அல்லது சனாதன காவலரா ? என தலைப்பிட்டு முரசொலி தலையங்கம் எழுதி கடுமையாக விமர்சித்தது. இது ’நாகலாந்து அல்ல தமிழ்நாடு’ என்று குறிப்பிட்டு ’கொக்கென நினைத்தாயோ கொங்கனாவா’ என்று பொங்கியிருந்தது. இருந்தாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி இதையெல்லாம் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. அவர் தொடர்ந்து இதே பாணியிலேயே பேசிவந்தார். அதோடு, பல்கலைக்கழக துணை வேந்தர்களை ஊட்டிக்கு அழைத்து தனியாக மாநாடு நடத்தியது, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியது, புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக பேசுவது, ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருப்பது என ஆளுநர் மீது ஏகப்பட்ட புகார்களை வரிசைக்கட்டி எதிர்க்கட்சிகள் சொல்லிவருகின்றன.


’எல்லை மீறிய ஆளுநர்’ – டெல்லி சென்ற டி.ஆர்.பாலு 


ஒரு கட்டத்தில் ஆளுநரின் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ளாத திமுக, இந்திய அரசமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார் அவரை திரும்ப பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதமே எழுதியது. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று டெல்லியில் வைத்து பேட்டியும் கொடுத்தார்.


ஒரே நாடு முழக்கத்தை மீண்டும் முன் வைத்த ஆளுநர்


இந்நிலையில்,  கடந்த 4ஆம் தேதி ராஜ்பவனில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம்  நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்று ஏற்பாடுகளை செய்தவர்களை கவுரவிக்கும்  நிகழ்ச்சியில் புதிய சர்ச்சைக்கு திரி கொளுத்தி போட்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அந்த விழாவில் அவர் பேசும்போது, துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் ‘நாங்கள் திராவிடர்கள்’ என்ற பிற்போக்கு அரசியல் உள்ளது. கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக நாங்கள் ஒருங்கிணைந்த தேசத்தின் ஒரு பகுதி அல்லது அங்கம் இல்லை என்ற வாதத்தை முன் வைத்து வருகின்றனர். ஆனால், மாநிலம் உருவாகும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பாரதம் உருவாகிவிட்டது. அதனால், இங்கு அடிப்படையில் நாம் ஒரே நாடு என்பதில் குழப்பம் இருக்கக் கூடாது என்று பேசினார்.


தமிழகமா ? தமிழ்நாடா ? – விவாத்திற்கு வித்திட்ட ஆளுநர் கருத்து 


அதோடு, நாம் அனைவரும் ஒன்று, நாம் பாரத்தின் ஒரு பகுதி என்ற உண்மையை உணரவேண்டும். அதில் தமிழ்நாடும் ஒரு இடம் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். அதனால், தமிழ்-நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று இந்த மாநிலத்தை அழைப்பதே மிகவும் பொருத்தமானது என்றும் பேசியிருந்தார். அதோடு, திராவிட ஆட்சி குறித்தும் அவர் விமர்சித்து பேசியதாக தகவல் வெளியானது.


ஆளுநர் கருத்துக்கு எதிர்ப்பு – களத்தில் குதித்த டி.ஆர்.பாலு 


இந்நிலையில், ஆளுநரின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காரசாரமான வார்த்தைகளோடு பரபரப்பு அறிக்கை வெளியிட்டார் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல், குழப்பம், கொந்தளிப்பை உருவாக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடனே ஆளுநர் ரவி பேசிவருகிறார் என்றும், இப்படியான அபத்தமான கருத்துகளை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழ்நாடு பாஜக தலைவராக ஆகி பேசலாம் என்றும் காட்டமாக விமர்சித்திருந்தார். 


ட்விட்டரில் ட்ரெண்டான #தமிழ்நாடு ஹாஷ்டாக் 


அதே நேரத்தில், திமுக, நாம் தமிழர் கட்சியினர், தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று தான் அழைக்க வேண்டும் என்றும் கூறி தமிழ்நாடு என்ற ஹாஷ்டாக்கை உருவாக்கி, அதோடு பல்வேறு கருத்துகளை பகிர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.



முதலவருடன் ஆளுநர்


ஆளுநர் உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் – திமுக அரசின் மாஸ்டர் பிளான் 


இந்நிலையில், வரும் 9ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. ஆளுநர் சட்டப்பேரவைக்கு வந்து உரை நிகழ்த்தினாலும், அந்த உரையை தமிழ்நாடு அரசுதான் தயாரித்து கொடுக்கும். அதுதான் மரபு. அதன் அடிப்படையில், ஆளுநரின் திராவிடர், தமிழகம் என்ற விமர்சன பேச்சுக்கு, அவரை வைத்தே செக் வைக்க திமுக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆளுநர் உரையை வடிவமைக்கும்போது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,  கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட பெயர்களும், தமிழ்நாடு, திராவிடர், திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற வைக்க திமுக அரசு திட்டமிட்டு, ஆளுநர் உரையை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.


ஆளுநர் அப்படியே படிப்பாரா ? திருத்தி படிப்பாரா ? அல்லது படிக்க மறுப்பாரா ?


தமிழ்நாடு அரசு தயாரித்து தரும் உரையில் ஆளுநர் விமர்சித்த திராவிடம், திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தைகள் இருப்பின், அதனை அப்படியே ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் படிப்பாரா ? அல்லது அவருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அந்த வார்த்தைகளை நீக்கிவிட்டு மற்ற வரிகளை படிப்பாரா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


எது எப்படி இருந்தாலும் வரும் 9ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தும்போது பல சுவாரஸ்சியமான சம்பவங்கள் அரங்கேறும் என்பது உறுதியாகியுள்ளது.