பா.ஜ.க. எம். பி. பிரதாப் சந்திர சாரங்கி தலையில் காயம் ஏற்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காரணம் என்று தெரிவிக்கப்பட்டது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். 


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சியினர் அம்பேத்கர் பெயரை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து அமித் ஷா கருத்து தெரிவித்திருந்தார். ” அம்பேத்கர், அம்பேத்கர் என்ரு சொல்வது இப்போது ஒரு ஃபேஷன். இதற்கு பதிலாக, கடவுளின் பெயரை 7 முறை சொல்லியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்.” எனத் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாக எதிர்க்கட்சியினர், அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 


காங்கிரஸ் போராட்டம்:


அம்பேத்கர் பற்றி அவமதிக்கும்விதத்தில் கருத்து தெரிவித்த அமித் ஷாவை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, அவையில் பங்கேற்க உள்ளே செல்ல முயன்றனர். 


அப்போது, நுழைவு வாயிலில், காங்கிரஸ் அம்பேத்கரை தொடர்ந்து அவமதித்து வருவதாக கண்டனம் தெரிவித்து பா.ஜ.க. எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருகட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எம்.பி. ராகுல் காந்தி உள்ளே செல்லும்போது பா.ஜ.க.வினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சாரங்கி கீழே விழுந்து ரத்தம் வந்து காயம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, சக எம்.பி.க்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். தலையில் அடிபட்ட எம்.பி. பிரதாப் சாரங்கி, தான் படிக்கட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது ராகுல்காந்தி தன் மீது எம்.பி. ஒருவரை தள்ளிவிட்டதாகவும், அதன் காரணமாகவே தான் கீழே விழுந்து தலையில் அடிபட்டதாகவும் கூறியிருக்கிறார். நாடாளுமன்ற வளாகத்திலே எம்.பி. ஒருவர் தலையில் அடிபட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 






இதற்கு பா.ஜ.க. உறுப்பினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான கிரண் ரிஜ்ஜுஜூ .” நாடாளுமன்ற எம்.பி.க்களை தாக்கும் அளவுக்கு குங்ஃபு, கராத்தே கற்றுள்ளாரா? நாடாளுமன்றம் குத்துச்சண்டை செய்யும் இடம் இல்லை.” என்று தெரிவித்துள்ளார். 



ராகுல் காந்தி விளக்கம்:


ராகுல் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கையில்,” என்ன நடந்தது என்று உங்கள் கேமராவில் பதிவாகியிருக்கும். நான் நாடாளுமன்றத்திற்குள் செல்ல முயற்சித்தேன். பா.ஜ.க. எம்.பி.க்கள் என்னை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். என்னை வெளியே தள்ளினர். அவர்கள் மல்லிகாஜூர்ன கார்கேவையும் தள்ளிவிட்டனர். இது நடந்ததுதான். அவர்கள் எங்களை வெளியே தள்ளினர். எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவைக்கு உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், அவர்கள் எங்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர்.” என்று தெரிவித்தார்.


எம்.பி. ராகுல் காந்தி, பா.ஜ.க.வின் இரண்டு எம்.பி.க்களை தாக்கியதாக தெரிவித்துள்ளனர். அதற்கான வீடியோ ஏதும் இல்லாதபோது எது உண்மை என்பது குறித்தும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.