தமிழக அரசியல் களம் தற்போது முதலே 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் மீது ஆர்வம் கொண்டிருந்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினார்.
விஜய்யின் அரசியல் வருகை:
கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டில் தனது கொள்கைகள், எதிர்கால செயல்பாடுகள் குறித்து அறிவித்த பிறகு அரசியல் களம் மேலும் சூடுபிடித்தது. தி.மு.க.தான் தன்னுடைய அரசியல் எதிரி என்றும், பா.ஜ.க.தான் தன்னுடைய கொள்கை எதிரி என்றும் அவர் குறிப்பிட்டார். அது முதல் தமிழக வெற்றிக் கழகம் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை மட்டுமே விமர்சித்து வருகின்றனர்.
அரசியல் மாநாட்டிற்கு பிறகு விஜய் தீவிர அரசியலில் இதுவரை இறங்காவிட்டாலும், அவ்வப்போது பா.ஜ.க.வையும். தி.மு.க.வையும் விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், திருமாவளவனை இந்த விழாவில் பங்கேற்கவிடாமல் தி.மு.க. அழுத்தம் தருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இடைத்தேர்தலில் களமிறங்குவாரா?
தி.மு.க., த.வெ.க. மோதல் இணையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதன்காரணமாக, அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க. ஏற்கனவே புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையும் அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர். வழியை கையில் எடுப்பாரா?
இதனால், ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க.விற்கு சவால் அளிக்கும் விதத்தில் விஜய் தனது கட்சி வேட்பாளரை களமிறக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், முதன்முறையாக அரசியல் களத்திற்கு வந்துள்ள விஜய் பலமிகுந்த ஆளுங்கட்சியான தி.மு.க.வை எதிர்த்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தால், அது 2026 சட்டமன்ற தேர்தலில் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. இதனால், ஈரோடு கிழக்குத் தொகுதியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றே கூறப்படுகிறது.
எம்.ஜி.ஆர். 1972ம் ஆண்டு கட்சியைத் தொடங்கிய பிறகு திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் முதன்முதலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தினார். அந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் அபார வெற்றி பெற்றார். அதன்பின்பு, கோவை மேற்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வேட்பாளர் அரங்கநாயகம் வெற்றி பெற்றார். அப்போது ஆளுங்கட்சியாக இருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வை எதிர்த்து களமிறங்கி, தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கால் வெற்றியை வசப்படுத்தினார் எம்.ஜி.ஆர். இதனால், எம்.ஜி.ஆர். பாணியை அவர் கையில் எடுப்பாரா? என்ற கேள்வியும் ஒருபுறம் எழுந்துள்ளது.
2025 முதல் தீவிர அரசியல்:
மேலும், 2025ம் ஆண்டு தன்னுடைய அரசியல் நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற உள்ளது. தவெக-வின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட விஜய் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறும் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விஜய் தன்னுடைய கடைசி படமான தளபதி 69-ல் தீவிரமாக தற்போது நடித்து வருகிறார். இதன் பணிகள் முடிந்த பிறகு விஜய் மிகத் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். மேலும், கூட்டணிக்கான பணியிலும் விஜய் தீவிர முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.