கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு மனிதர் அவர் வகிக்கக்கூடிய பொறுப்புக்கு ஏற்றவாறு பேச வேண்டும். இன்றைக்கு துணை முதலமைச்சர் உதயநிதியின் நடவடிக்கைகளை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்துள்ள அவமானங்களை அமித்ஷா பட்டியிலிட்டுள்ளார். அம்பேத்கர் வாழ்ந்த இடம் அனைத்தையும் வாங்கி மக்கள் வந்து செல்லும் இடமாக பாஜக மாற்றியுள்ளது என கூறினார். இந்தி தெரியாது போடா என்று சொன்ன உதயநிதிக்கு அமித்ஷா பேசியதில் என்ன புரிந்தது எனவும் கேள்வி எழுப்பினார். உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை நடத்தும் விதத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அவருடைய இடத்திற்கும் தகுதிக்கும் தகுந்தாற்போல் பேசுகின்றாரா என்ற கேள்வியை மக்கள் முன்பு வைக்கிறேன் என குறிப்பிட்டார்.
பழனி அருகே ஒருவர் மீது வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறுவது. அவர் அண்ணாமலையின் உறவினரா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், கொங்கு பகுதியில் எனக்கு அதிக சொந்தங்கள் இருக்கிறார்கள். மத்திய மாநில அரசு எடுக்க கூடிய நடவடிக்கைகளில் பாஜக மாநில தலைவராக நான் தலையிடுவதில்லை எனவும் சொந்தக்காரர்களையும் சொந்தங்களையும் வேறுபடுத்தி பேசுவதில்லை. தமிழகம் முழுவதும் எனக்கு சொந்தம் தான் என்றும் யாராக இருந்தாலும் அரசு எந்த நடவடிக்கை எடுக்கிறதோ அதற்கு அவர்கள் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலமாக அரசு என்ன சொல்கிறார்களோ அதை கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
அண்ணன் சீமான் அவர்கள் ஒரு விஷயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லோரும் அப்பா, அம்மா, சித்தப்பா, பெரியப்பா என சொந்தங்கள் தான். அல் உம்மா என்பது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அதில் குறிப்பாக பாட்ஷாவுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து அவர் பரோலில் வெளிவந்திருக்கிறார். அவர் உயிரிழந்த நிலையில் அவரை மத அடிப்படையில் அடக்கம் செய்யுங்கள். ஆனால் நாங்கள் தியாகிகளை விதைத்துள்ளோம் என அரசியல் கட்சிகள் சொல்ல வேண்டிய கருத்துக்கள் இல்லை எனவும் கூறினார். 1998 இல் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்து 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சூழலில் நேற்றைய நிகழ்வை காவல்துறை சரியாக கையாளவில்லை. மறைமுகமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தார்கள். சீமானின் பேச்சை மக்கள் முழுமையாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியதுடன் பொறுப்பில் இருக்கக் கூடிய அரசியல் கட்சி தலைவர்களும் அரசியல்வாதிகளும் இன்னும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஷா ஊர்வலத்தில் கலந்து கொண்டிருக்கிறார். நாம் தமிழர் கட்சி தடை செய்யப்பட வேண்டிய கட்சியா என்றால் இல்லை எனவும் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் அப்பா அம்மா இருக்கிறார்கள். அதில் ஒரு இஸ்லாமிய குழந்தையும் இருக்கிறது. அந்த குழந்தைக்கு அப்பா அம்மா இருக்கிறார்கள். பாஷா அவர்கள் சீமானுக்கு அப்பாவாக இருந்தால் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேரும் அப்பா தான் 200 பேர் படுகாயம் அடைந்தவர்களும் அப்பா தான் என்பதால் அதையும் சீமான் பார்க்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். எங்கே அரசியல் செய்ய வேண்டும் என அவர்கள் சிந்திக்க வேண்டும். எங்கோ சென்றிருக்க வேண்டிய கோவை மாநகரம் இன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு கோவை குண்டு வெடிப்பு முக்கிய காரணம். பாஜக எப்போதுமே இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என கூறுகிறார்கள். ஆனால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பானவர்கள் பயங்கரவாதத்திற்கு தான் எதிரானவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
இஸ்லாம் மதத்தில் இருந்து வரும் தீவிரவாதியைத் தான் சுட்டிக்காட்டுகிறோம். ஆனால் இஸ்லாம் மதத்தை எதிர்க்கவில்லை. நாங்களும் இப்தார் விருந்தை பாஜக சார்பில் கொடுத்து கொண்டாடுகின்றோம். அவர்களுடன் இருக்கின்றோம் என்றும் ஆனால் பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு தான் அதை சொல்வேன் என்பதை சீமான் யோசிக்க வேண்டும் என்றார். இறந்து போன மனிதருக்கு மரியாதையா என்றால் அதை நாங்களும் கொடுக்கிறோம். ஆனால் அதை ஊர்வலமாக நடத்தி தியாகியை போல் பட்டம் கொடுத்து தான் கோவையில் திமுக அரசியல் செய்ய வேண்டும் என நினைத்தால் கோவை மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என அண்ணாமலை கூறினார். பாட்ஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் யாரையும் தடுக்க மாட்டோம் என்று சொன்ன காவல்துறை வெள்ளிக்கிழமை நடக்கக்கூடிய பாஜகவின் பேரணிக்கு என்ன செய்கிறார்கள் என்று நீங்களே பாருங்களேன். பாஜக தலைவர்களின் வீட்டுக்கு சென்று கைது செய்வேன் கோவை தலைவர்கள் யாரையும் வெளியே விட மாட்டேன் இரண்டு பேர் வெளியே வந்தால் கைது செய்வேன் என சொல்வார்கள். என் ஐ ஏ குற்றப்பத்திரிக்கையை நன்றாக படித்தால் எந்த அளவிற்கு ஆழமாக கோவையில் பயங்கரவாதம் இருக்கிறது என்று தெரியும். கோவையில் முழுமையான அமைதி வரும் பொழுது மட்டும் தான் கோவை மாநகரம் இழந்த பொலிவை முழுமையாக மீட்க முடியும். நாளை உங்கள் குழந்தை வளர்ந்த மாநகரத்தில் இருக்க வேண்டும் என்றால் மக்கள் முடிவெடுக்க வேண்டும். வரும் வெள்ளியன்று பாஷா ஊர்வலத்திற்கு எதிராக நடைபெறும் பாஜகவின் கருப்புக்கொடி பேரணிக்கு தடை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
பாஜக இல்லாமல் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் நாங்கள் உங்களுக்கு ஒரு பொருளாதாரத்தை கொண்டு வருகிறோம் என கூறுவதற்கு எதிர்க்கட்சியிடம் ஒன்றுமே இல்லை. பேசுவதெல்லாம் ஜாதி மற்றும் இன மொழி பிரச்சனை வடக்கு தெற்கு போன்றவை மட்டுமே. தமிழ்நாட்டிற்கு இத்தனை திட்டத்தை கொண்டு வருவேன் என்று 40 எம்பிக்களும் பேசி இருக்கிறார்களா என்றால் இல்லை என குற்றம் சாட்டினார்.
அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன். நான் மாநில தலைவராக வந்த பிறகு எத்தனை மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள், பொதுச் செயலாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதையும் திமுக எண்ணி பார்க்க வேண்டும். இதற்கு முன்பும் அப்படித்தான் இருந்தது என்றும் அதே வேளையில் திமுகவில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் பட்டியலின சகோதரர்கள் என கேள்வி எழுப்பியதுடன் 35 திமுக அமைச்சர்களில் யாருக்கு எந்த அதிகாரம் இருக்கிறது என்று பாருங்கள் மூன்றாவது இடத்தில் இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த இடத்தை வழங்கிவிட்டு உதயநிதிக்கு மூத்தவர்களாக இருக்க கூடிய பட்டியல் இன சகோதரர்களுக்கு 34, 35 வது இடத்தை கொடுத்து இருக்கிறீர்கள் என்றும் விமர்சித்தார். அதே வேளையில் பாஜக அமைச்சரவை பட்டியலையும், திமுக அமைச்சரவை பட்டியலையும் ஒப்பிட்டு பாருங்கள் என்றும் குறிப்பிட்டார். காங்கிரஸ் அம்பேத்கரை அவமானப்படுத்தவில்லையா என்றும் இந்திரா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோருக்கு பாரத ரத்னா கொடுத்துவிட்டு அம்பேத்கரை ஏன் மறந்தீர்கள். 1980ல் ஜனதா கட்சி ஆட்சி வந்த பிறகு ஜனதா கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி அதன் பிறகு அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவர் இறந்த பிறகே பாரத ரத்னா வழங்கப்பட்டதாகவும், ஏன் காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை என்றும் சாடினார். அம்பேத்கருக்கு போடும் வாக்கு குப்பைத் தொட்டியில் போடப்படும் வாக்கு என்று காங்கிரசார் கூறியதை மறந்து விட்டீர்களா? அம்பேத்கரை ஜெயிக்க வைத்தது அன்று இருந்த ஜன சங்கம் என்றும் பட்டியலின சகோதர சகோதரிகள் என்று முதலமைச்சர் பேசுவது அழகல்ல பட்டியலின சகோதர சகோதரிகளுக்கு என்ன அதிகாரம் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
சர்வதேச போதை பொருள் கடத்தல் தலைவராக இருக்கக்கூடிய சாதிக் பாஷா தமிழ்நாடு பாடநூல் சப்ளையருக்கு புத்தகம் விநியோகித்திருப்பதாகவும் அப்படி இருக்கும்போது இங்கு கல்வி விளங்குமா? அரசு பள்ளியோ தனியார் பள்ளியோ ஆரம்பப்பள்ளியோ விளங்குமா?
அதே வேளையில் அமித்ஷாவிற்கு தனிப்பட்ட முறையில் கோயம்புத்தூருக்கு என் ஐ ஏ மற்றும் என் சிபி அலுவலகம் வரவேண்டும் என தான் கடிதம் எழுதி உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் நிச்சயமாக அதை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் கோவாவிற்கு சென்ற போது அவரது தனிப்பட்ட புகைப்படம் எப்படி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தது. இதுதான் திமுக காட்டக்கூடிய அரசியல் நாகரீகம் மக்களை மதிக்க கூடிய விதம் என்றும் யார் அந்த புகைப்படத்தை எடுத்து வெளிட்டார்களோ அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறினார். மேலும் நடிகர் விஜய் தமிழக அரசியலை உற்று கவனிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் திரை துறையில் பிஸியாக இருந்ததால் மோடி ஐயாவின் அரசியலை உற்று நோக்கினார்களா என்பது தெரியவில்லை. ஆனால் 10 ஆண்டுகளாக அம்பேத்கர் சொன்னபடி அரசியல் செய்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்தது யார் என்பதை அவர் சுட்டிக்காட்ட வேண்டும் என்றார்.
பத்தாண்டு கால ஆட்சியில் ஒரு இடத்திலாவது அம்பேத்கருக்கு எதிராக நாங்கள் நடந்து கொண்டோம் என்று உதயநிதி ட்வீட் போடட்டுமே. அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளது. அதைத்தான் 1968 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வந்துள்ளோம். இது எப்படி அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.