"ஈழத் தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் சீமானே" அடங்கு இல்லையென்றால் அடக்கப் படுவாய் என எச்சரித்து ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொண்டி பேரூர் திமுகவினர் போஸ்டர் ஒட்டி உள்ளதும், அந்தப் போஸ்டருக்கு பக்கத்திலேயே "தொண்டி நகர திமுக சங்குகளுக்கு எச்சரிக்கை" சீமானை பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது என நாம் தமிழர் கட்சி சார்பில் பதிலுக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர், இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடத்தினர். அப்போது நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் என்பவர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.




அப்போது முதல்வரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் மேடையில் ஏறி மரியாதையாக பேசுங்கள் என நாம் தமிழர் தம்பிகளை எச்சரித்ததுடன், மேடையிலிருந்த மைக்செட் உள்ளிட்டவற்றை கீழே தள்ளி அமர்க்களம் செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினரையும் விலக்கி அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கானா வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதே வரிசையில் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொண்டி பேரூர் திமுகழகம் சார்பில் சீமானை எதிர்த்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.




அதில், அடங்கு இல்லையேல் அடைக்கப்படுவாய் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டருக்கு கீழே நாம் தமிழர் கட்சியினரும் ஒரு எச்சரிக்கை போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், தொண்டி நகர் திமுக சங்கிகளுக்கு எச்சரிக்கை. அன்னை தமிழினத்தை அழித்தொழித்த கயவர் கூட்டமே.. சீமானை பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. நாங்கள் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல என்று எச்சரிக்கும் வகையில் அதில் ஒட்டப்பட்டுள்ளது. சீமான் செருப்பைத் தூக்கி காட்டிய விவகாரம் போஸ்டர் மோதல் முதல், கைகலப்பு வரை வந்திருக்கிறது.




ராமநாதபுரத்தில் தற்போது போஸ்டர் அரசியல் தலைதூக்கியுள்ளது என்று கூறலாம்., ஏனெனில், அதிமுக விலிருந்து நீக்கப்பட்டு, திமுகவிலும் தன்னை ஏற்றுக்கொள்ளாத நிலையில்,யாரையும் சந்திக்காமல் வீட்டுக்குள் முடங்கிகிடந்த அன்வர் ராஜா, எம்.ஜி.ஆரின் 34 வது நினைவு நாளான  நேற்று, "தலைவா கட்சியில் இருந்து என்னால் விலகி  இருக்க முடியவில்லை, ஏனெனில் நான் தினமும் உன்னை நினைக்கிறேன்... அதில், நான் என்னை மறக்கிறேன்" என்ற உருக்கமான வாசகங்களை எழுதி எம்.ஜி.ஆரிடம் நீதி கேட்பது போலவும் சுவரொட்டிகளை ஒட்டி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை இன்னும் தன்னால் ஜீரணிக்கமுடியவில்லை என்று அந்த போஸ்டர் மூலம் சூசகமாக அதிமுக தலைமைக்கு அன்வர் ராஜா உணர்த்த முயற்சித்திருந்தார்.




ஜெயலலிதா உள்ளிட்ட யார் படமும் இடம்பெறாத அந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர். ஒருவருடைய படம் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது, அதேபோல கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்வர்ராஜாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும், இப்படிக்கு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக தொண்டர்கள் என்ற  பெயரிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு தலைமைக்கு தன்னை மீண்டும் சேர்த்துக்கொள்ள தூதுவிட்டிருந்தார்.  இன்று தொண்டி பேரூராட்சியில் திமுகவினரும் நாம் தமிழர் கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி எச்சரிக்கை விடுத்து சுவரொட்டி  ஒட்டி போஸ்டர் அரசியல் செய்து வருகின்றனர்.