கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு புனித தோமையார் மலை  தேவாலயத்தில் வழிபாடு நடத்திய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் , 50 க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி பொட்டலங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் புதிதாக வந்த சட்டங்கள் குறித்து தங்களது நிலைபாட்டை கூறினார், "பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முடிவு வரவேற்கத்தக்கது , இதன் மூலம் பெண்கள் கல்லூரி படிப்பை முடித்து , உடல் , மன ரீதியாக பாதுகாப்புடன், எதிர்காலத்தை திட்டமிட உதவும் என்றாலும் கிராமங்களில் 18 வயதில் திருமணம் செய்யவே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். எனவே இது தொடர்பாக இந்தியா முழுவதும் மக்கள் கருத்தையும் கேட்க வேண்டும். மக்கள் வரவேற்றால் அரசாணை பிறப்பிக்கலாம்." என்று கூறினார். மேலும் நாட்டின் கொரோனா நிலையை குறித்து பேசுகையில், "அரசு மக்களுக்கு  பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும். பொதுமக்கள் தவறாமல் முகக் கவசத்தை அணிய வேண்டும். கொரோனா , ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால் அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்." என்று குறிப்பிட்டார்.



மேலும் நாம் தமிழர் திமுகவை விமர்சிக்கும் விதம் குறித்து எதிர் கருத்துகளை தெரிவித்தார், "மேடையில் சீமான் செய்த செயல் தவறானது .சீமான் செய்தது , பதிலுக்கு திமுகவினர்  செய்தது  அனைத்தும் அரசியல்தான். தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக அவர்கள் இப்படி செய்துள்ளனர்.". மேலும் தேமுதிக கட்சியின் நிலைபாடுகள் குறித்து பேசுகையில்,"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திட்டமிட்டபடி தேமுதிக தனித்துப் போட்டியிட்டு உறுதி. அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கட்சியில் செயல்  தலைவர் பொறுப்பை ஏற்படுத் வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தினர். ஒட்டுமொத்த நிர்வாகிகளின் கருத்தை பெற்று செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்து செயற்குழு , பொதுக்குழுவில்  விஜயகாந்த் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்." என்று கூறினார்.



இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடிக்க உள்ளதாகவும் இதற்காக நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்த் நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நடிக்க இருப்பதாக வந்த தகவல் தவறானது என பிரேமலதா கூறியுள்ளார். "விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தியை பார்த்து வியந்தேன். தவறான செய்தி அது. விஜயகாந்த் தற்போது கட்சிப்பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வில் இருக்கிறார். ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியின் தலைமைக்குழு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்" என பிரேமலதா தெளிவு படுத்தியுள்ளார்.