தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் மறைந்துவிட்டதால், தமிழக சட்டசபை தேர்தல் மீது தேசிய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தத் தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகளுடன், சீமானின் நாம் தமிழர், கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், தினகரனின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.




வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை நேற்றுடன் நிறைவு பெற்றது. தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் இன்று காலை முதல் தொடங்கியது. உரிய போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்புடன் அதிகாரிகளின் மேற்பார்வையில் வாக்கு இயந்திரங்கள், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களின் பாதுகாப்பிற்காக, 1.58 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.