விழுப்புரம் மாவட்டம் அதிமுகவின் மரக்காணம் ஒன்றிய செயலாளர் ரவிவர்மாவின் இல்ல காதணி விழா அனுமந்தை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி விழாவில் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினார்.
அதைத்தொடர்ந்து மேடையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-
இறைவன் நல்ல ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கின்றான். நான் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி ஏற்று முதல் முதலாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான். அதுவும் விழுப்புரம் மாவட்டத்தில். நான் இடைக்கால பொதுச்செயலாளராக ஆவேன் என்றும் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு ஆகி இதுபோல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்றும் எதிர்பார்க்கவில்லை. தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளது. அதிமுக கட்சியை ஆரம்பிக்கும் போது இரு பெரும் தலைவர்கள் எவ்வாறு பல்வேறு சோதனைகளை தாண்டி வெற்றி பெற்றார்களோ அதே போல் தான் தற்பொழுது வெற்றி அடைந்துள்ளோம்.
இரு பெரும் தலைவர்கள் எவ்வாறு கட்சிக்காக போராடினர்களோ அதே போல் தான் இங்குள்ள உண்மை விசுவாசிகள் கட்சிக்காக போராடி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருந்ததாகவும் அவர்களின் முகத்திரை தற்போது கிழிக்கப்பட்டுள்ளதாகவும், நம்மோடு இருந்தவர்களே நமது இயக்கத்தை பலவீனமடைய செய்தார்கள், 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அதிமுக வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் நம்மோடு இருந்த சிலரின் சூழ்ச்சியால் வெற்றியை தடுத்துள்ளார்கள். எந்த ஒரு கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டன் உழைத்து உருவாக்கிய கட்சி அதிமுக, இது உழைப்பால் உயர்ந்த கட்சி, உழைப்பால் ஆட்சிக்கு வந்த கட்சி ஆகவே ஸ்டாலின் அவர்களே எங்களோடு இருக்கும் எட்டப்பனை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைக்கிறீர்கள். அது ஒருபோதும் நடக்காது, தர்மம், நீதி ஆகியவையே வென்ற சரித்திரம் உள்ளது. எனவே அதுதான் வெல்லும்” எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், ஆர் பி உதயகுமார், எம்சி சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்