விருதுநகர் அருகே உள்ள பாலவனத்தம் கிராமத்தில் ஓரிரு நாட்களுக்கு முன் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் 100 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்கள் அமைச்சரிடம் தங்களது குறைகளை மனுக்களாக கொடுக்க வந்தனர். அப்போது மனு கொடுக்க வந்த பெண் ஒருவரை அந்த மனுவால் அவரது தலையில் அறைந்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியிடம் உடனடியாக அந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியதோடு சமூக வலைதலங்களில் வைரலாகவும் பரவியது. இது தொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது கண்டனத்தையும் அமைச்சருக்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக அப்பெண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் பொழுது, ”என் பெயர் கலாவதி, அமைச்சர் ஆடு கொடுக்க வந்திருந்தார். அப்போது எனது அம்மாவிற்கு முதியோர் உதவித்தொகை தொடர்பாக மனு அளிக்க சென்றேன். அதை வாங்கி கொண்டு செய்து கொடுப்பதாக சொன்னார். மேலும் அமைச்சர் உடன் பிறந்த சகோதரர் மாதிரி தான், சொந்தக்காரர் என்ற உரிமையிலே என்னை செல்லமாக தட்டினார்” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்