தே.மு.தி.க. தலைவரும், நடிகருமானவர் விஜயகாந்த். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்தின் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாளை மறுநாள் அவரது 69வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் அவரது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். 




இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தன்னை யாரும் சந்திக்க நேரில் வரவேண்டாம் என்று விஜயகாந்த் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,


" கொரோனா தொற்று இன்னும் குறையாத நிலையில், அனைவரின் நலன் கருதி பிறந்தநாளன்று தொண்டர்கள் யாரும்  தன்னை சந்திக்க நேரில் வரவேண்டாம். 2005ம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு, 2006ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்த நாளை “வறுமை ஒழிப்பு தினமாக” கடைபிடித்து வருகிறோம். இயன்றதைச் செய்வோம். இல்லாதவர்க்கே என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறோம். தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போதுதான் குறைந்து வரும் நிலையில், பெருங்கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது.


எனவே, அனைவரின் நலன் கருதி எனது பிறந்த நாள் அன்று தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம். கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அவரவர் இருக்கும் இடத்திலே தங்களால் இயன்ற உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்து பிறந்தநாளை கொண்டாடுங்கள். மேலும், உடல்நல பரிசோதனைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறேன்.”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர் விஜயகாந்த். அரசியல் வாழ்க்கைக்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை பெரிதும் குறைத்துக்கொண்ட விஜயகாந்த், கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்.


 உடல்நலக்குறைவு காரணமாக அவரால் முன்புபோல பேச இயலவில்லை. மேலும், பொது இடங்களுக்கும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை கடந்த சில வருடங்களாகவே தவிர்த்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இரு முறை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


2006 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட விஜயகாந்த், 2011ம் ஆண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க.வை எதிர்க்கட்சி வரிசையில் அமரவைத்தார். பின்னர், 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு தலைமை வகித்து தோல்வியை தழுவினர். 2021 சட்டசபை தேர்தலிலும் தினகரனுடன் கூட்டணி வைத்து தோல்வியை தழுவியது தே.மு.தி.க. உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.