சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுகவை சேர்ந்த அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நந்தகுமார், 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததால் தான் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டதாக கூறினார்.


அதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தடுப்பணை உடையவில்லை என்றும், உபரி நீர் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். நேற்று இரண்டு மணி நேரம் பெய்த மழைக்கே சென்னை தத்தளித்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


அப்போது குறுக்கிட்ட நந்தகுமார்,  100 நாட்களுக்கு முன்பாக ஆட்சியில் இருந்த நீங்கள் முறையாக நீர் வழித் தடங்களை சரி செய்திருந்தால் தற்போது தண்ணீர் தேங்கி இருக்காது , என பதிலளித்தார்.


அப்போது இடைமறித்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, ”செம்பரம்பாக்கம் ஏரி எனது தொகுதிக்குள் வருகிறது. ஏரியிலிருந்து நீரை திறந்துவிட நான்கு நாட்கள் அதிகாரிகள் காத்திருந்தும் அதற்கான அனுமதி கிடைக்காமல், அதன்பின்பு உபரிநீர் திறந்து விடப்பட்டதால் பெரு  வெள்ளம் ஏற்பட்டு சென்னை மாநகரம் மூழ்கியது” என தெரிவித்தார்.


அதற்கு மீண்டும் பதிலளித்த  எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே 100 ஏரிகள் இருக்கின்றன. அந்த நூறு ஏரிகளும் நிரம்பி அதில் இருந்து மொத்தமாக வெளியேறிய உபரி நீர் சேர்ந்துதான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது” என்றார்.


அப்போது பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ”வெள்ள பாதிப்பு தொடர்பாக சி.ஏ.ஜி அறிக்கை  பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இரண்டு ஆண்டுகள் தாமதமாக வைக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள் தீர்மானமாகக் கொண்டு வந்து கேள்வி எழுப்பியபோதும் ஏன் வெளியிடவில்லை” என கேட்டார்.


மேலும், பேரிடர் மேலாண்மை குழு 2015 வெள்ளத்துக்கு முன்பு மூன்று வருடங்களாக ஒருமுறைகூட கூட்டப்படவில்லை என்று தெரிவித்த நிதியமைச்சர், முழுமையாக நிறைந்திருந்தபோது ஏரியை எப்போது திறப்பது  என முடிவெடுக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும், சரியான நேரத்தில் உத்தரவு கிடைத்திருந்தால் முன்கூட்டியே உபரி நீர் திறக்கப்பட்டிருக்கும், என பின்னர் வைக்கப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு  இருப்பதை சுட்டிக்காட்டினார்.


தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அணைகள் நிரம்பும் போது அதிகாரிகள் திறந்துவிடுவது வழக்கமான ஒன்றுதான், என தெரிவித்தார்.