தேமுதிக  தலைவர் விஜயகாந்த்  உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன், நிறைய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதனை இங்கே காணலாம். 


கேள்வி: அப்பா விஜயகாந்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது. அவரை பழையபடி கட்சி நிகழ்ச்சிகளில் பார்க்கவேண்டும் என தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள். அந்த அளவுக்கு உடல் ஒத்துழைப்பு கொடுக்கிறதா? 


பதில்: கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சற்று பின்னடைவாக உள்ளது. ஆனால் அவர் நலமாக உள்ளார். விஜயகாந்த் 100 ஆண்டுகள் வரை நன்றாக இருப்பார். ஆனால் பழைய மாதிரி நடப்பாரா, பேசுவாரா என கேட்டால் அதற்கான முயற்சிகள் அனைத்தையும் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் அனைவர் மாதிரியும் நாங்களும் நம்புறோம். இப்போதைக்கு அவரின் உடல்நிலை நன்றாக உள்ளது என தெரிவித்துக் கொள்கிறேன். 



கேள்வி: அப்பா (விஜயகாந்த்) இருந்த காலக்கட்டத்தில் கட்சி வளர்ந்துபோனது சாதாரண விஷயமா இருந்துச்சி. ஆனால் இன்றைக்கு அவர் இருந்தாலும் கூட அம்மா (பிரேமலதா) மற்றும் நீங்கள் (விஜய பிரபாகரன்) இருந்தும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துப் போக முடியலையே? 


பதில்: ‘முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது’ என்பது விஜயகாந்தின் தாரக மந்திரம். அதையே நாங்களும் கொண்டிருக்கிறோம். நிச்சயம் முடியாது என்பது எதுவும் இல்ல. முடியும் என்பதால் தான் முயற்சி செய்கிறோம். எங்க அம்மா இன்றைக்கு ஒன்றும் கட்சிக்கு வரவில்லை. ரசிகர் மன்றம் செயல்பட்ட காலத்தில் இருந்தே அப்பாவுக்கு நிழலாக இருந்து சப்போர்ட் செய்திருக்கிறார்கள். நானும் சின்ன வயதில் இருந்து அப்பா எப்படி ஏழை மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள், கட்சியை எப்படி கஷ்டப்பட்டு வளர்த்திருக்கிறார்கள் என பார்த்துள்ளேன். என் லட்சியத்தை ஒதுக்கி வைத்து விட்டு தொண்டர்கள் கூப்பிட்ட குரலுக்காக அரசியலுக்கு வந்துவிட்டேன். 



கேள்வி:  தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வேறு கட்சிக்கு செல்கிறார்களே? 


தேமுதிகவில் இருந்து மட்டும் தொண்டர்கள் வேறு கட்சிக்கு செல்லவில்லை,. மாற்று கட்சியை சேர்ந்தவர்களும் வேறு கட்சியில் இணைந்துள்ளனர். உதாரணமாக செந்தில் பாலாஜியை சொல்லலாம். அதிமுகவில் இருந்து திமுக சென்று இன்று சிறையில் இருக்கிறார். அதனால் அந்த வியூகத்தை மாற்றக்கூடாது. தேமுதிகவை மட்டும் குறை சொல்லாதீர்கள். அரசியலில் லாபத்துக்கும், வியாபாரத்துக்கும் வந்து சேர்ந்தவர்கள் இருக்கலாம். ஆனால் விஜயகாந்திற்கு விசுவாசமானவர்கள் தான் எங்களுடன் இருக்கிறார்கள். 



கேள்வி: கட்சியை விட்டு வெளியே போவதற்கு விஜயகாந்த் உடல்நிலை மட்டுமல்லாமல், பிரேமலதா, சுதீஷ் இருவரும் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறுகிறார்களே? 


பதில்:  காசு வாங்கிட்டு போறன்னு சொல்றவங்களை யார் மேலயாவது குற்றச்சாட்டு வைக்க வேண்டும். அதனால் நாங்கள் கூட இருக்கும்போது அண்ணி, தம்பி என சொல்வார்கள். அதே வெளியே போய்ட்டா அந்நியமா தெரிவோம் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.