தமிழ்நாடு அரசியல் களத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் முக்கியமான ஒன்று, நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றமான தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளது குறித்துதான். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் என்ற செய்திகள் ஏற்கனவே பல ஆண்டுகள் ஊடகங்களில் வெளியாகிவந்த நிலையில், நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக தனது அரசியல் கட்சியை அறிவித்துவிட்டார். தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துள்ள நடிகர் விஜய், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பில் ”தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்’ ஒருபுறம் என்றால் நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் 'பிளவுவாத அரசியல் கலாச்சாரம்’ மறுபுறம் என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளது மிகவும் கவனிக்கப்பட்டுள்ளது.
விஜயின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள இந்த கருத்தின் மூலம், மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக கட்சிகளைக் குறிவைத்து, நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்’ எனவும், மத்தியில் ஆட்சியில் இந்துத்துவா கொள்கையை மையமாகக் கொண்டு அரசியல் செய்து வரும் பாஜகவை மைய்யப்படுத்தி, நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் 'பிளவுவாத அரசியல் கலாச்சாரம்’ என குறிப்பிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்துள்ள விஜய் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதும் இல்லை, அதில் யாருக்கும் ஆதரவும் இல்லை என தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சித் தலைவராகியுள்ளார். விஜயை நோக்கி தற்போது சில முக்கியமான கேள்விகள் தயாராக உள்ளது. இதற்கெல்லாம் நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தமிழ்நாடு - தமிழகம் என்ற பெயரில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் சலசலப்பு குறித்து தெரிந்தும் நடிகர் விஜய் தனது கட்சிக்கு தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியது ஏன்? இதற்கு ஏதாவது தனிக் காரணம் இருக்கின்றதா?
தமிழ்நாடு என்பது இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களைக் காட்டிலும் மாநில உரிமையில் உறுதியாக இருந்துள்ளது. மாநில உரிமை என்றால் அதில் கட்டாயம் தமிழ்நாடு எனும் அளவிற்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற மக்களவை மற்றும் மாநிலங்களை உறுப்பினர்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சிகள் வரை பல்வேறு அரசியல் முன்னெடுப்புகளை நடத்தியுள்ளது. மாநில உரிமையில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது, மொழிக் கொள்கை. தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை கொண்டுவந்த இருமொழிக் கொள்கையில் தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடு என்பது மிகவும் முக்கியமான கேள்வியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளில் பாஜக தவிர மற்ற கட்சிகள் நீட் தேர்வு கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பாரா இல்லையா அல்லது நீட் தேர்வு குறித்து அவரது நிலைப்பாடு என்ன என்பதும் கவனம் பெறக்கூடிய கேள்வியாக இருக்கும்.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை மூலம் பள்ளியில் இருந்தே குழந்தைகள் தங்களது குலத்தொழிலை கற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடு?
பாஜக கொண்டு வந்து இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பைக் கிளப்பிய குடியுரிமைச் சட்டத்திருத்தம் தொடர்பாக விஜய் என்னமாதிரியான கருத்தைக் கொண்டுள்ளார் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும்.
மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ - மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும்போதும், லியோ பட இசை வெளியீட்டு விழாவின் போதும் மதுபானக் கடைகளை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தார். மது இல்லா தமிழ்நாடு என்பதற்கு விஜயிடம் உள்ள திட்டம் என்ன?
மிகவும் முக்கியமாக, இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் கருத்து என்ன? கடந்த காலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த, தற்போது ஆட்சியில் உள்ள கட்சிகளின் மீது வைக்கப்படும் முக்கியமான விமர்சனம், ”பட்டியலின மக்களுக்கு தேர்தலில் போட்டியிட ஒதுக்கப்படும் தனித் தொகுதிகளைக் கடந்து, பொதுத் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுவதே இல்லை என்பதுதான். இந்த பாணியை தமிழக வெற்றி கழகம் பின் தொடருமா? அல்லது தனித் தொகுதி மட்டும் இல்லாமல் பொதுத் தொகுதியிலும் போட்டியிட பட்டியலின மக்களை களமிறக்குமா? கட்சியிலும் முக்கிய பொறுப்புகள் பட்டியலினத்தவருக்கு வழங்கப்படுமா?
அதேபோல் இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் மட்டும் போட்டியிட வைப்பாரா அல்லது பொதுத் தொகுதியிலும் களமிறக்கப்படுவார்களா?
கட்சியில் மகளிருக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்? சரிபாதியோ அல்லது குறிப்பிட்ட சதவீதமோ மகளிருக்கு கட்சியிலும் தேர்தல் களத்திலும் வாய்ப்பு அளிக்கப்படுவதை கட்சியின் கொள்கை முடிவாக தமிழக வெற்றி கழகம் எடுக்குமா?
பொறுத்திருந்து பார்ப்போம்....!