Jharkhand Trust Vote: ஜார்கண்ட் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி எம்.எல்.ஏக்கள் ஜார்கண்ட் திரும்பியுள்ளனர்.


ஜார்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு:


பணமோசடி வழக்கில் கைதாவதற்கு முன்பாக ஹேமந்த் சோரன் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது கட்சியை சேர்ந்த சம்பை சோரன் ஜார்கண்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அம்மாநில சட்டமன்றத்தின் இரண்டு நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் சம்பை சோரன் தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் சம்பை சோரனின் ஆட்சி தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


பெரும்பான்மைக்கான எண் என்ன?


ஜார்கண்ட் சட்டமன்றத்தில் மொத்தம் 81 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியமைக்க பெரும்பான்மையாக 42 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சம்பை சோரனின் ஆட்சிக்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த 28 உறுப்பினர்கள், காங்கிரசை சேர்ந்த 17 உறுப்பினர்கள், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஒருவர் மற்றும் சிபிஐஎம்எல் கட்சியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 47 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.  அதேநேரம், எதிர்க்கட்சிகள் தரப்பில் பாஜகவில் 26 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 32 பேர் உள்ளனர். இதனால், சம்பை சோரன் தலைமையிலான அரசு எளிதில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.






ராஞ்சி திரும்பிய எம்.எல்.ஏக்கள்:


இதனிடையே, குதிரை பேரம் நடைபெறுவதை தவிர்ப்பதற்காக, ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஐதராபாத் அழைத்துச் செல்லப்பட்டு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். கடும் கண்காண்ப்புக்கு மத்தியில் 3 நாட்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதை முன்னிட்டு, நேற்று இரவு சார்டட் விமானத்த்தின் மூலம் நேற்று இரவு அவர்கள் மீண்டும் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, பேருந்துகள் மூலம் எம்.எல்.ஏக்கள் தனியார் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக பேசிய ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கிர் ஆலம்,  நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்,  கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் "ஒற்றுமையாக" இருக்கிறோம்” என பேசினார். 


பாஜக சொல்வது என்ன?


ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை சந்திக்கும் என, பாஜக பாஜகவின் தலைமை கொறடா பிரஞ்சி நரேன் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டது,  அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதை இது காட்டுகிறது என குறிப்பிட்டார். இதனிடையே, பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றது.