விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 9 -ம் தேதி நடைபெறவுள்ளது.
சென்னை அருகே உள்ள பனையூரில் உள்ள மக்கள் இயக்க தலைமை அலுவகலத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது.
நடிகர் விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இது விரைவில் அரசியல் கட்டியாக மாறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் 100-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்றனர்.
விஜய் பயிலகம், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு என விஜய் மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வழக்கறிஞர் அணி, ஐ.டி. அணி என தனித்தனியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணியை வலுப்படுத்துவதற்காக மாவட்ட மகளிர் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மக்கள் இயக்கத்தின் அடுத்தகட்ட நகர்வாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.
முன்னதாக நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் 10ஆவது மற்றும் 12ஆவது பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த தமிழ்நாடு மாணவ மாணவியர்களுக்கு உதவித் தொகை வழங்கினார்.
இந்த நிகழ்வில் காமராசர், அம்பேத்கர், பெரியார் ஆகியோரைப் படிக்க வேண்டும் எனக் கூறிய நிலையில், விஜய்யின் இந்தப் பேச்சு அவரது அரசியல் பயணத்திற்கான வேலைகளை விஜய் செய்து வருகிறார் என்று பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி பயிலகங்கள் தொடங்கப்பட்டன. தற்போது வரை தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 84 பயிலகங்கள் வரை திறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அடுத்ததாக புதுச்சேரியில் பயிலகங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லியோ
மற்றொருபுறம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாம் முறையாக இணைந்துள்ள இப்படத்தில், த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், கௌதம் மேனன் மன்சூர் அலி கான், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், நடிகர் சஞ்சய் தத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னெடுத்த ‘எண் மண், என் மக்கள்’ நடைபயணத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றதகாக சர்ச்சை எழுந்த்து. இதற்கு இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , “தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியிருந்தார். இப்போது மகளிர் அணியுடன் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.