சனாதனம் என்ற ஒற்றை வார்த்தை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி தெரிவித்த கருத்து, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


தேசிய அளவில் பேசுபொருளான சனாதனம்:


சென்னையில் நடைபெற்ற நிகழ்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” என பேசியிருந்தார். 


ஆனால், உதயநிதியின் இந்த கருத்தை எக்ஸ் வலைதளத்தில் திரித்து பதிவிட்ட பாஜக தேசிய ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா, "இனப்படுகொலை செய்ய உதயநிதி அழைப்பு விடுப்பதாக" கூறினார். இதை தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்து மக்களுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசுவதாக கருத்து பரவியது.


இதை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். டெல்லி, பிகாரில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அயோத்தி சாமியார் என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


சனாதனம் என்றால் என்ன?


சனாதன தர்மம் குறித்து உதயநிதி பேசியது வெறுப்பு பிரச்சாரம், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளது என ஒரு தரப்பும், சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராகத்தான் அவர் பேசியுள்ளார் என மற்றொரு தரப்பும் வாதிட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில், உண்மையில் சனாதனம் என்றால் என்ன? அதற்கு இந்து மதத்திற்கு என்ன தொடர்பு? என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்த நிலையில், சனாதனம் குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசிய வீடியோ ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது. அதில், சனாதனம், மனுதர்மம் குறித்து கருணாநிதி விரிவாக எடுத்துரைத்துள்ளார்.


அதில் கருணாநிதி பேசியதாவது, "சூத்திரன் சும்மா படிக்கக்கூடாது என்றால் கேட்போமா அதனால், படித்தால் பாவம் என்றார்கள். வெறும் பாவம் என்றால் பயப்படமாட்டோம் அல்லவா, அதனால் படித்தால் நரகத்திற்கு போவோம் என்றார்கள். அதையும் மிஞ்சி யாராவது படிக்க வந்தால், அவரை பிடித்து அவரின் நாக்கை இழுத்து வைத்து கொல்லிக்கட்டையால், பழுக்க காய்ச்சிய இரும்பால் சுட்டார்கள். 


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சொன்னது என்ன?


இது செய்தியாக மாத்திரம் அல்ல. இன்றைக்குக்கூட நீங்க மனுதரம் சாஸ்திரத்தை எடுத்து படித்து பாருங்கள். அதில் என்ன எழுதி இருக்கிறது என்றால் சூத்திரன் ஒருவன் படித்தால், அவனது நாக்கை இழுத்து வைத்து பழுக்க காய்ச்சிய இரும்பால் சுட்டு பொசுக்க வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். 


அந்த மனுதரம் சாஸ்திரம் இன்றும் கொளுத்தப்படாமல் நூலகத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. அது கொளுத்தப்படவில்லையே தவிர, அதில் உள்ள கருத்துக்களை கொளுத்தியவர் பெரியார். அதில் உள்ள கருத்துக்களை காலில் போட்டு மிதித்தவர் அண்ணா. அதில் உள்ள கருத்துக்களை கடலில் தூக்கி எறிந்தவர் அம்பேத்கர். இவர்களை எல்லாம் நீங்கள் மறந்துவிடக்கூடாது" என குறிப்பிட்டுள்ளார்.