தமிழக அரசியலில் வெற்றி, தோல்விகளை நிர்ணயம் செய்யக்கூடிய அனைத்து தரப்புகளையும் குறிவைத்து, விஜய் பேசியிருப்பது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.


8 நிமிட உரை:


தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக, முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.  அப்போது, விஜய் நிகழ்த்திய 8 நிமிட உரை தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


முதல் அரசியல் பாயிண்ட்:


எனக்கு என்னோட கனவுல சினிமா, நடிப்பு தான். அதை மட்டும் தான் என்னோட பயணம்னு போயிட்டு இருந்தது. ஒருவேளை.... அப்படின்னு இழுத்து சரி அதவிடுங்க அதபத்தி இப்ப எதுக்கு என சடாரென நிறுத்தி புன்னகையை வெளிப்படுத்தினார். ”ஒருவேளை நான் அரசியல்வாதி ஆகியிருந்தால்” என்பதை தான் அங்கு அவர் கூற வந்தார் என்பது பலரும் அறிந்த விஷயம் தான். 


கல்விக்கு முக்கியத்துவம்:


”முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு, எனது தரப்பில் இருந்து ஏதாவது செய்ய வேண்டும் என எனது மனதில் நீண்டகாலமாக ஓடிக்கொண்டு இருந்தது. அதுக்கான நேரம் தான் இது என நான் நினைக்கிறேன்” என்றார்.


சமூக வலதலங்களின் தாக்கம்:


இன்றைய உலகம் என்பது முழுவதும் தரவுகள் அடிப்படையிலானது. எங்க பாத்தாலும் வாட்ஸ்-அப். பேஸ்புக், இன்ஸ்டா அப்டின்னு நெறய இருக்கு. எல்லாத்துலயும் தகவல்கள் அதுல பெரும்பாலும் தவறான செய்திகள் தான். சோடியல் மீடியாக்கள்ள செய்தி போட்ற ஒரு சிலருக்கு, மறைமுகமாக ஏதோ ஒரு நோக்கம் இருக்கும். கவர்ச்சிகரமான தகவல்கள் மூலமா நம்ம கவனத்த ஈர்க்க பார்க்கலாம் அப்டின்னு போடுறாங்க. அதுல எத நம்பலாம், எது வேணும், வேணாம் அப்டின்னு நீங்க முடிவு பண்ணனும். இதுக்கு உங்க பாடப்புத்தகங்களை தாண்டி நெறைய படிக்கனும்.   


தலைவர்கள தெரிஞ்சுக்கங்க:


”முடிஞ்ச வரைக்கும் படிங்க. எல்லா தலைவர்களை பத்தி தெரிஞ்சுக்கங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர பத்தி தெரிஞ்சுக்கோங்க. நண்பனை பத்தி சொல்லு. உன்ன பத்தி சொல்றேன் அப்டின்னு சொல்லுவாங்க. எனக்கு தெரிஞ்சு அதெல்லா இப்ப மாறிடுச்சி. சோசியல் மீடியலா நீ எந்த பேஜ்-அ ஃபாலோ பன்றன்னு சொல்லு, உன்ன பத்தி நான் சொல்றன் அதுதான் இன்னைக்கு காலமா மாறிடுச்சு” என விஜய் பேசினார். 


நாளைய வாக்காளர்கள்:


மாணவர்களாகிய நீங்க தாங்க நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து வரக்கூடிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போறிங்க. ஆனா, நம்ம விரல வெச்சு நம்ம கண்ணையே குத்துறதுன்னு கேள்விபட்டு இருக்கிங்களா. அதுதான் இப்ப நடந்துட்டு இருக்கு. அததான் நாம இப்ப செஞ்சுட்டு இருக்கோம். எது? இந்த காச வாங்கிட்டு ஓட்டு போட்றது. உதாரணமா ஒரு ஓட்டுக்கு 1000 ரூபான்னு வெச்சிக்கிட்ட, ஒரு தொகுதில 1.5 லட்சம் பேருக்கு பணம் கொடுத்தா மொத்தம் 15 கோடி ஆகும்.  அப்ப, ஒருத்தர் 15 கோடி செலவு பண்ணா முன்னாடி எவ்வளவு சம்பாதிச்சு இருப்பாரு யோசிச்சு பாருங்க. இது எல்லாம் உங்க கல்வில சொல்லி கொடுக்கணும்னு நான் ஆசைபடுறேன். 


காசு வாங்கிட்டு ஓட்டு போடாத..


மாணவர்கள் எல்லாம் பெத்தவங்ககிட்ட காசு வாங்கிட்டு ஓட்டு போடாதிங்கனு சொல்லுங்க. முயற்சி செய்ங்க. அடுத்தடுத்த வருடங்களில் நீங்க தான் முதல் தலைமுறை  வாக்காளர்கள். இதெல்லாம் நடக்கும்போது தான் ஒரு கல்வி முறையே முழுமையா இருக்கும். 


அரசியல் அஸ்திவாரம்:


தமிழகத்தை பொருத்தவரையில் அனைவருக்குமான கல்வி, தரமான கல்வி கட்டமைப்பு, ஊழலற்ற அரசு, சமத்துவம், சமூக அரசியல் நேர்மையான ஆட்சி, ஏற்றத்தாழ்வுகளை தவிர்ப்பது,  இளைஞர்களின் நலன், ஊழலை ஒழிப்பது, வாக்கிற்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பது, இன்றைய அரசியல் மற்றும் சமூகத்தில் சமூக வலைதளங்களின் தாக்கம், போலி செய்திகள் போன்றவை அதிகளவில் பேசப்படும் தவிர்க்கமுடியாத சில தலைப்புகள் ஆகும். அவை அனைத்தையுமே தனது எட்டுநிமிட உரையில் சுட்டிக்காட்டியுள்ளார் விஜய். இதன் மூலம் தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் அனைத்தையும் தான் கவனித்தில் கொண்டு இருப்பதையும், அரசியல் கட்சிகள் செய்ய தவறி இருப்பதை தன்னால் மாற்ற இயலும் என்பதையும் விஜய் சூசகமாக இன்று தெரிவித்துள்ளார். அதையும் நாளைய தலைமுறை வாக்களர்களான மாணவர்கள் மத்தியில் பேசி, தனது அரசியல் பிரவேசத்திற்கான அஸ்திவாரத்தை மேலும் அவர் வலுப்படுத்தி உள்ளதார் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.