John Vs Aadhav : ”ஜான் ஆரோக்கியசாமி ஆடியோவை வெளியிட்டது ஆதவ் அர்ஜூனா?” வெளியான புதுத் தகவல்..!

’ஒரு உறையில் எப்போதுமே இரண்டு கத்திகள் இருக்க முடியாது. ஆதவ் அர்ஜூனாவின் அரசியல் வியூக தாக்குதலில் அதே மாதிரியான வியூக வகுப்பாளராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமி தாக்குப்பிடிப்பாரா?’

Continues below advertisement

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் அரசியல் வியூக வகுப்பாளராக கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருபவர் ஜான் ஆரோக்கியசாமி. சமீபத்தில் இவர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவருடன் உரையாடிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த ஆடியோ வெளியே வருவதற்கு காரணம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தேர்தல் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை பெற்றிருக்கும் ஆதவ் அர்ஜூனாதான் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய ஆதவ்

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வகித்த ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து திமுகவையும் தமிழக அரசையும் விமர்சித்து பேசி வந்தார். ஒரு கட்டத்தில் விஜயை அழைத்து எல்லோருக்குமான தலைவர் என்ற அம்பேத்கர் குறித்த புத்தகத்தை அவர் வெளியிட்ட நிலையில், அந்த விழா மேடையிலேயே திமுகவை மன்னாராட்சி என்றும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும் ஆதவ் கடுமையாக பேசிய நிலையில், அதே கருத்தை விஜயும் பேசினார்.

இதனால் திமுக தலைமை உஷ்ணமானது. இதனையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை தாங்க முடியாத ஆதவ் அர்ஜூனா, கட்சியை விட்டே விலகுவதாக கூறி ராஜினமா செய்தார்.

விஜய் கட்சியில் இணைய தூது – தடுப்பாளர்களாக மாறிய புஸ்ஸி, ஜான்

இதனையடுத்து, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட ஆதவ் அர்ஜூனா முயற்சிகள் மேற்கொண்டார். அதற்கு உடனடி தடையாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இருவரையும் தாண்டி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவெடுத்த ஆதவ், வழக்கம்போல் தன்னுடைய அரசியல் வியூகத்தை அரங்கேற்ற திட்டம் தீட்டியிருக்கிறார்.

ஜானுடன் நிர்வாகியை நெருங்கி, நம்ப வைத்த ஆதவ்?

அதனடிப்படையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவரை தேர்வு செய்து வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் நம்பகத்தன்மையை பெரும் வரை அவருடன் நெருங்கி பழக வைத்ததாக கூறப்படுகிறது. ஜான் அவரை முழுமையாக நம்பிய கட்டம் வந்தவுடன், கட்சியின் பொதுச்செயலாளர் பற்றியும் விஜய் உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும் அந்த நிர்வாகியிடம் ஜான் ஆரோக்கியசாமி தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். இதுதான் தருணம் என நினைத்த ஆதவ், அந்த ஆடியோவை நிர்வாகியிடமிருந்து பெற்று தன்னுடைய வியூக வகுப்பு நிறுவன ஊழியர்கள் மூலம் ஊடகங்களுக்கு பகிர்ந்தார் என்ற தகவல் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியில் இணைந்த ஆதவ் – ஜான் ஆரோக்கியசாமி காலியா ?

அதன்பின்னர், தன்னுடைய திட்டப்படி கட்சியில் இணைந்த ஆதவ்க்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவியை வாரி வழங்கியிருக்கிறார் விஜய். விஜய் வெளியிட்ட அறிவிப்பில் தன்னுடைய வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் ஆதவ் இணைந்து செயல்படுவார் என்று குறிப்பிட்டிருந்தாலும் ‘ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது’ என்பதற்கு இணங்க, ஆதவின் அரசியல் வியூகத்தில் அதே மாதிரியான வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Continues below advertisement