திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிப்காட் தொழிற்பேட்டை வேண்டும் ஆனால், மேல்மாவில் கூடாது என்றும் பாமகவை பிரிக்க திமுக சூழ்ச்சி செய்வது வருகிறது அது முற்றிலும் முறியடிக்கப்படும் என்றும் தமிழகத்தை ஆண்ட எந்த முதலமைச்சராலும் நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை ஆனால் பாமக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றப்படும் என திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
பாமக திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பாமக பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த அன்புமணி ராமதாஸுக்கு மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாட்டில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவாச்சாரியார்கள் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும், நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,தென்பெண்ணை செய்யாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...,
எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி மு. க. ஸ்டாலின் போன்ற எந்த முதலமைச்சர் ஆட்சிக்கு வந்தாலும் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளதாகவும், ஆனால் பாமக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் உரிமைக்கான புரட்சி வெடிக்க வேண்டும் திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது, சமுதாயத்தை இரண்டாக பிரிப்பதில் பட்டப்படிப்பு படித்தவர்கள் திமுக காரர்கள் என்றும் இந்த சூழ்ச்சியை தற்போது திமுக பாமகவில் செய்து வருகின்றனர். இந்த சூழ்ச்சி விரைவில் முறியடிக்கப்படும், தமிழக சட்டமன்றத்தில் வன்னியர் மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 44 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள வன்னியர் இன மக்களுக்கு பட்டியல் இன மக்களுக்கோ இதுவரை தமிழக அரசு எதுவும் செய்யவில்லை.
ஒரு காலத்தில் பள்ளிக்கூட வாசல்களில் தேன் மிட்டாய், பழங்கள் போன்றவை விற்பனை செய்து வந்ததனர் ஆனால் தற்போது தமிழகத்தில் பள்ளிக்கூட நுழைவாயில்களில் கஞ்சா விற்பனை செய்யபடுகிறது. குறிப்பாக தமிழகத்திலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிக அளவு கஞ்சா மற்றும் போதை பொருள் புழக்கத்தில் உள்ளதாக குற்றம் சாட்டினார்.
திருவண்ணாமலைக்கு சிப்காட் வேண்டுமென்றும் ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்மாவில் சிப்காட் வேண்டாம், தரிசு நிலம் உள்ள பகுதிகளில் சிப்காட் அமைக்க வேண்டும் என தெரிவித்தார். வன்னியர் சமூகத்தால் வளர்ந்து வந்த திமுக தற்போது வன்னியர்களுக்கு மதிப்பளிப்பது கிடையாது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாமகவின் ஒரே எதிரி திமுக தான்
பாமகவின் ஒரே எதிரி திமுக தான், திருவண்ணாமலை கிரிவலத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர், அவர்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட அமைச்சரும் செய்து தரவில்லை, கிரிவலம் வரக்கூடிய பக்தர்களின் அடிப்படை வசதியான கழிப்பிடம் உள்ளிட்டவை அமைக்க எனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 40 லட்சத்தை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காதது ஏன் ?
காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கர்நாடகாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த நிலையில் தற்போது மாநில மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க கர்நாடக முதல்வர் சித்ராம் ஐயா மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாகவும் கூறியவர், தெலுங்கானா ஆந்திரா கர்நாடகா ஒரிசா பீகார் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டு மக்களின் மொத்த உரிமைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மக்களின் உரிமை மீட்பு பயணம் வருகின்ற ஜூலை 25ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் மக்களின் அனைத்து உரிமைகளையும் கொண்டு நடத்தப்படும் இந்த மீட்பு பயணத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
நமக்குள் ஒருபோதும் வேற்றுமையும் வேண்டாம் ஒற்றுமையோடு இருந்து செயல்படுவோம் என பாமக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டு அவர் சமூக வலைதளங்களில்நம்மைப் பற்றி வரும் பதிவுகளுக்கு பதிலளிக்காமல் திமுகவை எதிர்த்து பதிவு போடுங்கள் என பாமக நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.