Vijay Payilagam: காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் பள்ளி மாணவர்களுக்கான படிப்பகத்தை துவங்கியுள்ளார்.
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை ஏற்கனவே மக்கள் இயக்கமாக மாற்றி அதில் பல்வேறு நலப்பணிகளைச் செய்து வருகிறார். குறிப்பாக, அண்மையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும், பத்தாவது மற்றும் பனிரெண்டாவது பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களை நேரில் அழைத்து, அனைவருக்கும் ரூபாய் 5 ஆயிரம் ஊக்கத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். மேலும், அந்த நிகழ்வில் அவர் பேசும் போது, இளைய தலைமுறையாகிய நீங்கள் பாடப்புத்தங்களை மட்டும் படிக்ககூடாது. மாறாக பாடப்புத்தகங்களுடன் சமூக கல்வியையும் கற்றுகொள்ள வேண்டும் என பொருள்படும்படி, காமராசர், அம்பேத்கர், பெரியார் ஆகியோரைப் படிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து, கடந்த வாரம் தனது மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில், 234 தொகுதிகளிலும் பள்ளி மாணவர்களுக்கான படிப்பகம் அமைக்கவும், காமராசர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், காமராஜரின் 121வது பிறந்த நாளான இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 234 தொகுதிகளிலும் உள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல், முதல் கட்டமாக தொகுதிக்கு ஒரு படிப்பகம் துவங்கப்பட்டுள்ளது. இதனை புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்தார்.
அரசியல் பிரவேசம்?
நடிகர் விஜயின் சமீபகால நடவடிக்கைகள் திரை வட்டத்தைக் கடந்து அரசியல் வட்டத்திலும் முணுமுணுக்க வைத்துள்ளது. குறிப்பாக நடிகர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான இயக்குநர் வெங்கட் பிரபுவுடனான தனது 69வது திரைப்படத்திற்குப் பின்னர், திரையிலகில் இருந்து 2 ஆண்டுகள் முற்றிலும் விலகியிருக்கப்போவதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே அரசியல் பாதையை முன்னெடுக்கும் நடிகர் விஜய், சரியாக 234 சட்டமன்ற தொகுதிகளை குறிவைக்கிறார். உதாரணத்திற்கு உலக பட்டினி தினத்தன்று 234 தொகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு தங்களது விஜய் மக்கள் இயக்கத்தினர் மூலம் மதிய உணவினை வழங்கினார். தொடர்ந்து, 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டினார், இன்று 234 தொகுதிகளிலும் படிப்பகம் தொடங்கியுள்ளார்.
இதற்கிடையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். நடிகர் விஜய் அப்படத்தின் டப்பிங் வேலைகளில் ரொம்ப பிஸியாக இறங்குவதற்குள் தமிழ்நாடு அரசியல் குறித்து விபரமாக தெரிந்துகொள்ளும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக மக்கள் இயக்கத்தினருக்குள் பேச்சாக இருக்கிறதாம்.