காங்கிரஸை சுற்றி சுழன்ற இந்திய அரசியல்:


சுதந்திர இந்தியா கடந்து வந்த அரசியல் பாதையை மூன்றாக பிரிக்கலாம். முதலாம் பகுதி, காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய காலம். முதல் தேர்தல் நடத்தப்பட்ட 1952ஆம் ஆண்டு முதல் 1990கள் வரையில், காங்கிரஸை சுற்றிதான் இந்திய அரசியல் சுழன்றது. அது வகுத்து கொள்கைதான், நாட்டை நிர்வகித்தது. 1977ஆம் ஆண்டு, காங்கிரஸ் தோல்வி அடைந்த போதிலும், மூன்றே ஆண்டுகளில் கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைத்தார் இந்திரா காந்தி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி, தன்னுடைய பலத்தை இழக்க தொடங்கியது. 


காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது இங்கிருந்துதான். இதுதான் இரண்டாவது பகுதி. மாநில கட்சிகள் கோலோச்சிய காலம். 1990களில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில், எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. மாநில கட்சிகளின் தயவுடன்தான், காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஆட்சி அமைத்தன.


இந்த காலக்கட்டத்தைதான் மீண்டும் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்திய அரசியலில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயன்று வருகிறது. 2019ஆம் ஆண்டில், இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது பெரிதாக பலன் தரவில்லை. ஆனால், இந்த முறை அதை சாதிக்க ஸ்டாலினின் திமுக, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், அகிலேஷின் சமாஜ்வாதி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துள்ளது.


பாஜகவை வீழ்த்த முனைப்பு காட்டும் எதிர்க்கட்சிகள்:


எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல் வெற்றியாக பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், 15 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 மாநில முதலமைச்சர்கள் உட்பட 32 எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு 16 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், குடும்ப நிகழ்ச்சியை காரணம் காட்டி ராஷ்டிரிய லோக் தள தலைவர் (ஆர்எல்டி) ஜெயந்த் சவுத்ரி மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.


இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்த, அறிவிப்பு வெளியிட்டு, பாஜக அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கலாம் என்பதால், பல்வேறு விவகாரங்களில் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மற்ற கட்சிகளிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.


அதேபோல, பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்திராதவாறு எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரே வேட்பாளரை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் உடன்பட்டதாக தெரியவில்லை. அதேபோல, மாநிலங்களில் அந்தந்த கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப இடங்களை ஒதுக்கவது குறித்து தலைவர்கள் ஆலோசனையில் இறங்கியுள்ளனர். ஆனால், கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது பெரிய கேள்வியாக உள்ளது.


இப்படிப்பட்ட சூழலில்தான், கர்நாடக மாநிலம் பெங்களூரவில் அடுத்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. ஜூலை 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெறும் கூட்டத்திற்கு வரவுள்ள தலைவர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விருந்தளிக்க உள்ளார். இதில், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார். ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திலும், சோனியா காந்தி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக காங்கிரஸ் தலைவர் மலிகார்ஜுன் கார்கே, ஆம் ஆத்மி கட்சி உள்பட 24 ஒத்த கருத்துள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


எதிர்க்கட்சி ஒற்றுமைக்கு முட்டுக்கட்டை போடும் பிரச்னைகள்:


பெங்களூரவில் நடைபெறும் கூட்டத்தில் ஆம் ஆத்மி கலந்து கொள்ளுமா? இல்லையா? என்பது தெளிவாக தெரியவில்லை. டெல்லி அவசர சட்டம் விவகாரம், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே பிரச்னையாக வெடித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் டெல்லி அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், மத்திய பாஜக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தலைவலியாக மாறியது.


மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால், மாநிலங்களவையில் சட்டத்தை நிறைவேற்றுவதை தடுக்க எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த பிரச்னை, பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலும் எதிரொலித்தது. அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என ஆம் ஆத்மி ஏற்கனவே அறிவித்துவிட்டது.


ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இன்னும் தனது நிலைபாட்டை அறிவிக்காமல் உள்ளது. அதற்கு காரணம், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், அவசர சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தியுள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களிலும், ஆம் ஆத்மி ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், அதை எதிர்த்து அரசியல் செய்து வருகிறது காங்கிரஸ். இந்த மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியில்தான் ஆம் ஆத்மியின் வெற்றி தொடங்கியது.


அதன் தொடர்ச்சியாக, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கால் பதிக்க முயற்சி செய்து வருகிறது. அதே சமயத்தில், இழந்த தனது செல்வாக்கை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறது காங்கிரஸ். 


இதேபோல, கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுஜனநாயக முன்னணியை எதிர்த்து அரசியல் செய்து வருகிறது காங்கிரஸ். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் முக்கியமான கட்சிகளாக கருதப்படும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை மேற்குவங்கத்தில் எதிரெதிர் துருவங்களாக இருக்கின்றன.


ஜூலை 18ஆம் தேதி, எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் நிலையில், ஜூலை 20ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் தொடங்குகிறது. தேர்தலுக்கு முன்னதாகவே, ஒற்றுமையுடன் செயல்பட்டு நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு அழுத்தம் தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.