கடந்த மாதம் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல இடங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியினை பதிவு செய்திருந்தது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்றவர்களை விஜய் தனது பனையூரில் உள்ள இல்லத்தில் அழைத்து பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்பொழுது தொடர்ந்து ரசிகர்களிடம் மக்கள் பணியாற்ற வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருந்தார். மேலும் நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் "முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள் அதன் பிறகு மக்கள் பணி செய்யலாம்" எனவும் அறிவுறுத்தி உள்ளார். அதேபோல வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் எனவும் கூறியுள்ளார். நடந்த முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 115 வார்டு உறுப்பினர் பதவிகள், தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை கைப்பற்றி இருந்தனர்.
இந்நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து நகர்புற தேர்தலிலும், விஜய் மக்கள் இயக்கம் அதிக இடங்களில் வெற்றி பெற வியூகங்களை வகுத்து செயல்பட தொடங்கி உள்ளது. விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனைத்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு மாவட்டம் தோறும் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் இளைஞர்களை அதிக அளவு உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறும் இடங்களில், புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதற்கேற்றார் போல் தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இது மட்டுமில்லாமல் பூத் வாரியாக கட்சிக்கு ஆட்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் நியமித்து வருகின்றனர். அதேபோல வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம்களில் விஜய் ரசிகர்கள் மற்றும் இளைஞர்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறும் நாட்கள் மற்றும் இடத்தை குறித்த விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அளித்தல் உள்ளிட்ட பணிகளை வேகமெடுத்து செய்து வருகின்றனர். அதேபோல வார்டு வாரியாகவும் புதிய நிர்வாகிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் நியமித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் நடைபெறும் கூட்டங்களில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசியபோது, வெற்றி பெற்றவர்கள் சந்தித்த பொழுது விஜய் அனைவரையும் மிகவும் பாராட்டியதாகவும், வருகின்ற நகர்ப்புற தேர்தலுக்கு தயாராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்றார் போல் தற்போது தீவிர பணியாற்றி வருகிறோம். நகர்ப்புற தேர்தலை பொறுத்தவரை ஏராளமானவர்கள் போட்டியிட ஆர்வமாக உள்ளனர். மக்கள் இயக்கத்தின் உழைப்பதற்கு மட்டுமே இம்முறை சீட்டு வழங்கப்படும். அதே போல மக்கள் மன்றத்தில் தொடர்ந்து தங்களுடைய பங்களிப்பை கொடுத்து வருபவர்களுக்கு மட்டுமே உயர் பதவிகள் அளிக்கப்படும் என தெரிவித்தனர்.
சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்ட அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு அருகே திருமணியில் மாவட்டத் தலைவர் சூர்ய நாராயணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது, வாக்காளர் பட்டியல் முகாம்களில் இயக்கத்தினர் பங்கேற்று 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிடட பல்வேறு முக்கிய முடிவுகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 95 பேர் மனு செய்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட மாணவரணி தலைவர் நரேந்திரன், தொண்டரணி மாவட்டத் தலைவர் பாலாஜி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.