`ஜெய் பீம்’ படத்தின் சர்ச்சை தொடர்பாக நடிகர் சந்தானம் முன்வைத்த கருத்துகள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே #WeStandWithSurya என்று நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகப் பெரும்பான்மையான நெட்டிசன்கள் டிரெண்டிங் செய்து கொண்டிருக்கையில், நடிகர் சந்தானத்தின் கருத்து ட்விட்டரில் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
`சபாபதி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சந்தானத்திடம் `ஜெய் பீம்’ படம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. `எதைப் பற்றி வேண்டுமானாலும் உயர்த்திப் பேசுங்கள், ஆனால் யாரையும் தாழ்த்திப் பேசாதீர்கள். மக்கள் அனைவரும் சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் மறந்து திரையரங்கத்திற்கு வருவது, தங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்குத் தான். இனி வரும் தலைமுறை இயக்குநர்கள் மக்களுக்கு நல்ல படங்களைத் தர வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமுதாயம், மதம் ஆகியவற்றைத் தாழ்த்தி அவர்களின் மனதைக் காயப்படுத்த வேண்டாம்’ என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸுடன் சந்தானம் புகைப்படம் எடுத்துக் கொண்டது, அவர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டது, சமீபத்திய `டிக்கிலோனா’ படம் தொடர்பான உருவக்கேலி, மாற்றுத் திறனாளிகளைக் கேலி செய்தது முதலான சர்ச்சைகள் எனப் பல விவகாரங்களையும் நடிகர் சந்தானத்தின் சமீபத்திய கருத்துடன் இணைந்து அவரைக் கடுமையாக வசைபாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.